நெல்லை மாநகராட்சி பொறுத்தவரை 55 வார்டுகள் உள்ளன. இதில் திமுக சார்பில் 44 பேரும் திமுக கூட்டணி சார்பில் ஏழு பேரும் அதிமுக சார்பில் நாலு பேரும் மாமன்ற உறுப்பினராக உள்ளனர். கடந்த ஜூலை   மூன்றாம் தேதி நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக அதிகாரப்பூர்வமாக 25வது வார்டு உறுப்பினர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவித்தது. அவரை எதிர்த்து ஆறாவது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ் போட்டியிட்டார். திமுக மேயர் வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் முப்பது வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆறாவது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ் 23 வாக்குகளும் செல்லாதவையாக ஒரு வாக்கும் பதிவாகி இருந்தது. இதனையடுத்து நெல்லை மாநகர ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுக புத்திரா மேயர் தேர்தலில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவித்து அதற்கான சான்றிதழ்களையும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வழங்கினார்.




அதன்பின் இன்று நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நெல்லை மாநகராட்சியில் ஏழாவது மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுக புத்திரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் மேயருக்கான அங்கியினையும், செங்கோலையும் மேயரின் தாயார் மரகதம்மாளுடன் இணைந்து மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா வழங்கினார். கடந்த 1994 ஆம் ஆண்டு நெல்லை நகராட்சி மாநகராட்சியாக  தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயாராக  திமுகவைச் சார்ந்த உமாமகேஸ்வரியும் அதனைத் தொடர்ந்து 2001 தேர்தலில் ஜெயராணி அதிமுக சார்பிலும், 2006 ஆம் ஆண்டு ஏ.எல். சுப்பிரமணியன் திமுக சார்பிலும், 2011 விஜிலா சத்யானந்த் அதிமுக சார்பில் மேயராகவும், 2014 ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த புவனேஸ்வரியும், 2022 ஆம் ஆண்டு திமுக சார்பில் சரவணனும், அதனைத் தொடர்ந்து ஏழாவது மேயராக திமுகவைச் சார்ந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நெல்லை மாநகராட்சியில் மேயராக இன்று பதவி ஏற்றார்.  முன்னதாக அவர் காலையில் தனது வீட்டில் இருந்து வழக்கமாக வரும் சைக்கிளில் புறப்பட்டு நெல்லை டவுணில் உள்ள விநாயகர் கோயில் மற்றும் நெல்லையப்பர் கோவிலில் சாமி கும்பிட்டு வழிபட்ட பின் நெல்லையப்பர் கோவிலில் உள்ள காந்திமதி யானைக்கு பழங்கள் வழங்கி அதன் பின் சைக்கிளிலே மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் வாசங்கங்கள் அடங்கிய பதாகை ஒன்றை வழங்கி ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில் "நான் மேயரானால்" என்று இதர 54 மாவட்ட உறுப்பினர்களின் திட்டங்களை கேட்டு வார்டு தேவைகளை பூர்த்தி செய்து திருநெல்வேலி மாநகராட்சி முன்மாதிரியான மாநகராட்சியாக செயல்படுத்திட வணக்கத்துக்குரிய மேயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! என குறிப்பிட்டிருந்தார். 




இந்த பதவியேற்பு விழாவை  நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் புறக்கணித்தார். ஏற்கனவே  நெல்லை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்பின் ஆதாரவாளர்களும்,  நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஆதரவாளர்களுக்குமிடையே பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில் நேற்று சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை மூலம் அது வெட்ட வெளிச்சமானது. இந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணனுக்கு எதிராக உள்ள திமுக மாவட்ட உறுப்பினர்கள் இந்த பதவி ஏற்பு விழாவை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.