தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மணல் குவாரிகள் அமைக்க கோர்ட்டு தடை விதித்து இருந்தது. இதனால் கட்டுமான பணிகளுக்கான மணல் இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55 ஆயிரத்து 445 டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. இதற்காக அந்த நிறுவனம் ரூ.7 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 813 மதிப்புள்ள மணலுக்கு, ரூ.2.88 கோடி சுங்க வரி, ரூ.38.40 லட்சம் ஜி.எஸ்.டி. வரியுயும் செலுத்தி இருந்தது. தொடர்ந்து இந்த மணலை கட்டுமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது.




ஆனால், தமிழக அரசு சார்பில் தனியார் நேரடியாக மணல் விற்பனை செய்ய தடை விதித்தது. அது மட்டுமின்றி மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று அரசாணையை வெளியிட்டது. இதனை எதிர்த்து மணல் இறக்குமதி செய்த தனியார் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த மணலுக்காக ரூ.12 கோடியை தனியார் நிறுவனத்துக்கு கோர்ட்டு மூலம் வழங்கியது. இதனை தொடர்ந்து அரசே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.




அதன்படி தமிழக அரசு, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை செய்யப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்காக முன்பதிவு, 2018-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி மாலை 4 மணி முதல் தொடங்கப்பட்டது. இந்த மணலுக்காக, TNsand இணையதளத்திலும், செல்போன் செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். துறைமுகத்தில் முதல்கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து மணல் வழங்கப்படும். TNsand இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி ஒரு யூனிட் (சுமார் 4.5 டன்) மணல் விலை ரூ.9,990 ஆகும். மேலும், 2 யூனிட் - ரூ.19,980; 3 யூனிட் - ரூ.29,970; 4 யூனிட் - ரூ.39,960, 5 யூனிட் - ரூ.49,950 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.




இதனை தொடர்ந்து மலேசியா மணல் விற்பனை தொடங்கப்பட்டது. ஒரு சிலர் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்கி சென்றனர். ஆனால் பலர் இந்த மணலை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த மணலுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டதே காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எம்.சாண்ட் விற்பனையும் அதிகரிக்கப்பட்டது. அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் எம்.சாண்ட் கொண்டு கட்டப்பட்டன. இதனால் இறக்குமதி செய்யப்பட்ட மலேசியா மணலின் மீது இருந்த பில்டர்ஸ் பார்வை எம்.சாண்ட் பக்கம் திரும்பியது. இதனால் மலேசியா மணல் பாராமுகமாகி விட்டது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ள மணல் விற்பனையாகாமல் தேங்கி உள்ளது. செடி, கொடிகளால் சூழப்பட்டு கிடக்கிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக மணல் வைக்கப்பட்டதால் அதற்கு அரசு சார்பில் ரூ.90 லட்சம் துறைமுகத்துக்கு வாடகை கட்டணம் தர வேண்டியுள்ளது.




இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர் ஜான்சன் கூறும் போது, தமிழகத்தில் மணல் விலை அதிகரித்தது தொடர்ந்து வீடு கட்டுவோர், கட்டுமான பொறியாளர்கள், மற்றும் ஒப்பந்தகாரர்கள் தங்களது தேவைகளுக்காக எம் சாண்டை (manufactured sand ) உபயோகிக்க துவங்கினர். தற்போது எம் சாண்ட்  போதுமான அளவில் கிடைத்து வருகிறது. மலேசிய மணல் இறக்குமதி செய்யப்பட்டபோது மக்களிடம்  எம் சாண்ட் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது, இதனால் மலேசிய மணலை வாங்க ஆர்வம் காட்டினார்கள் ஆனால் தற்போது தரமான எம்சாண்ட் மணல் கிடைப்பதாலும், கடந்த இரண்டு வருடங்களில் எம் சாண்ட் பயன்பாட்டை தெரிந்துகொண்டமையாலும், மலேசியா மணல் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது. அதே நேரத்தில் ஆற்று மணலில் தான் வீடு கட்டுவோம் என்ற மனநிலையில் உள்ளவர்களும் இருக்கின்றனர். எனவே தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணலை அரசு குறைந்த விலையில் தக்க சமயத்தில் விரைவாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசுக்கு வருமானமும் கிடைக்கும் என்கிறார்.


தற்போது ஆற்று மணல் ஒரு யூனிட் ரூபாய் 12000 திற்கு விற்கப்படுகிறது. ஆனால் எம் சாண்ட் ஒரு யூனிட்டுக்கு 4500க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் எம் சாண்டை உபயோகிக்க துவங்கி விட்டனர். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் எம் சாண்ட் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் சீரான விலையில் எம் சாண்ட் கிடைக்கும் என்கிறார்.