தென் மாநிலங்களின் பிரபல விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா விழா குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதே போன்று  நெல்லை  மாநகர் பாளையங்கோட்டையில் 12 சப்பரங்களுடன் மகிஷசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தசரா விழாவானது கடந்த 25ம் தேதி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான அம்மன்களின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. குறிப்பாக பாளையில் உள்ள  தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வகர்மா உச்சினிமாகாளி, புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் ஆகிய கோயில்களில் அம்மன் கோயில்களில் தசரா பண்டிகை தொடங்கியது.




 தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது. 10ம் திருநாளான விஜயதசமியையொட்டி நேற்று இரவு பாளை பகுதியில் உள்ள அம்மன் கோயில்கள், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில்களிலிருந்து மின்னொளியில் 12 சப்பரங்கள் நள்ளிரவு 8 ரதவீதிகளில் வலம் வந்தனா். இன்று காலையில் ராமசாமி கோயில் திடலில்  அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை நிறைவேற்ற தேங்காய்கள் உடைத்தும், புடவை, பழ வகைகள் சமா்பித்ததும்  தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். இன்று  நள்ளிரவில்  மாரியம்மன் கோவில் திடலில் மகிஷசம்ஹாரம் நடைபெறுகின்றது.


இதே போன்று நெல்லை மாவட்டத்தில் விஜயதசமி தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாநகாில் பல்வேறு வீதிகளில் அமைந்துள்ள அம்மன் கோவில்களின் 34 சப்பரங்களின் அணி வகுப்பு  நடைபெற்றது. தென் மாவட்டத்தில் நெல்லையில் நடைபெறும் தசரா திருவிழா சிறப்பானது. குறிப்பாக பாளையங்கோட்டை மற்றும் நெல்லையில் அமைந்துள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களில் இருந்தும் அம்மன் சப்பர பவனி புறப்படும். இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நகரில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் தினமும் சிறப்பு பூஜைகள் அம்மன் அலங்காரம் நடைபெற்றது,  விஜயதசமி தினமான  நேற்று  நெல்லை மாநகாில் அமைந்துள்ள பிட்டாபுரத்தி அம்மன், துர்க்கை அம்மன்,  தேவி மாரியம்மன், தேவி ஸ்ரீ சுந்தராட்சி அம்மன்,  முத்தாரம்மன்,  உச்சினிமாகாளி அம்மன்,  முப்பிடாதி அம்மன், வலம்புரி அம்மன், ராஜேசுவரி அம்மன்,  திரிபுரசுந்தரி அம்மன்,  மாரியம்மன், அறம் வளர்த்த நாயகி அம்மன்,  தங்கம்மன், ஸ்ரீ ஆயுள்பிராட்டி அம்மன், நல்லமுத்து அம்மன் என 34 அம்மன் கோவில்களில் இருந்து அம்மன் சப்பர பவனி நெல்லையப்பா் ரதவீதிகளில் வலம் வந்தன.




பின்னா் அனைத்து அம்மன் சப்பரங்களும் சக்தி  தரிசனம் என்று நெல்லையப்பர் கோயில் முன்பு அணி வகுத்து நின்றன. சக்தி தரிசன மேடையில் பிரத்யங்கராதேவி சிவபூஜை செய்யும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, அனைத்து அம்மனுக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை காட்டப்பட்டது.  சப்பரங்கள்  இரவில் மின் விளக்குகளில் சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு ஜொலித்தன. கொரோனாவிற்கு பின் 2 வருடங்கள் கழித்து சப்பர பவனி  நடைபெற்றதால் சப்பரங்களின் அணிவகுப்பை ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கண்டு களித்தனர்.  நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் போல ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் குவிந்ததால் விடிய விடிய நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.