தமிழர் தந்தை என அழைக்கப்படும் சி.பா. ஆதித்தனாரின் 42 வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும நிகழ்ச்சி நடைபெற்றது. மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமை தாங்கினார். இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சி.பா. ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு மதிமுக சார்பில் புகழஞ்சலி செலுத்துகிறோம். அவர் சிங்கப்பூர் சென்று வக்கீல் படித்துவிட்டு லண்டனில் படித்தபோது பத்திரிக்கை நிருபராக மாறி அதன் பிறகு பெரும் பொருள் ஈட்டி வழக்கறிஞராக தமிழகத்திற்கு வந்தவர். தமிழர் தந்தை சிபா ஆதித்தனார். தமிழனுக்காக பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலாக மாலை முரசு நாளிதழை தொடங்கினார். அதன் பின்னர் தினத்தந்தி பத்திரிகையை தொடங்கினார். தற்போது பங்களா முதல் குடிசைவாசி வரையிலும் தினத்தந்தியை படிக்கின்றனர். காலை எழுந்தவுடன் தந்தி அதன்பின் தான் காபி என்ற நிலைமையை கொண்டு வந்து பத்திரிக்கை புரட்சியை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மக்கள் மனதில் பதிய வைத்தவர். தமிழுக்காக தமிழ் மொழிக்காக தனித்தமிழ்நாடு என்ற முழக்கத்தை வைத்து தந்தை பெரியாரை அழைத்து கொண்டு போய் தஞ்சை தரணியில் மாநாடு நடத்தி கைது செய்யப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் திருக்குறளை வாசித்து தான் சட்டப்பேரவையை தொடங்க வேண்டும் என்ற மரபை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சிபா ஆதித்தனார். தமிழுக்கு அவர் செய்திருக்கும் தொண்டு, தமிழ் நாட்டுக்கு அவர் செய்திருக்கும் சேவை, தமிழ் பண்பாட்டை உயர்த்த சடுகுடு விளையாட்டின் மூலமாக விளையாட்டுத்துறை என ஒவ்வொரு துறையிலும் தமிழரின் தனித்தன்மையை நிலை நாட்டியவர். அமைச்சராகவும் இருந்து கூட்டுறவு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். ஈழம் வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்தவர். அவரது புகழ் என்றும் நீடித்து நிலைக்கும். வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகளுக்கு வேறுவேலை இல்லை, ஓட்டும் இல்லை, அதனால் விமர்சனம் செய்கின்றனர். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தான் அவர் சென்றிருக்கிறார். வெற்றியோடு ஸ்டாலின் தமிழகம் திரும்புவார்.
மதுவிலக்கு வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டேன். எனது கிராமத்தில் தாயார் தலைமையில் போராட்டம் நடத்தி அங்கு டாஸ்மாக் கடை இருக்க கூடாது என பெற்றுத் தந்தவன். தற்போது திமுக அரசு 500 மதுக்கடைகளை மூட முடிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடியது. அதன் விளைவுகளை தான் இன்று அனுபவித்து கொண்டிருக்கிறோம். இந்திய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும், அவருக்கு தான் அந்த தகுதி உண்டு, பிரதமர் திறப்பு அரசியல் ஆகிவிடும். எனவே எதிர்கட்சிகள் கலந்து கொள்வதா இல்லையா என்பதில் கலந்து கொள்வது இல்லை என்பது முடிவுக்கு வருவதாக தெரிகிறது. எதிர்கட்சிகள் அதிலே பங்கெடுப்பது இல்லை என்ற ஒரு கருத்து எதிர்கட்சிகளுக்கு மத்தியிலே வாத பொருளாகி இருக்கிறது. இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்