தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் திருச்செந்தூர் கோவில் சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் இயங்கும் தனியார் பள்ளி  வேன் பனவடலிசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பனவடலிசத்திரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வேன் வந்தபோது  தனியார் பள்ளி வாகனமும்,  காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.


சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழப்பு:


அதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். காரின் உள்ளே சங்கரன்கோவில் அருகே பந்தப்புளி ரெட்டியபட்டியை சேர்ந்த குருசாமி (45), குருசாமியின் மனைவி வேலுத்தாய் (35),  மாமியார் உடையம்மாள் (60), குருசாமி மகன் மனோஜ் குமார் (22) உள்ளிட்ட 4 பேரும் காரை மேல ஒப்பனையாபுரத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஒட்டி வந்தார். அவரையும் சேர்த்து 5 பேரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியாகினர். 




4 மாணவிகள் படுகாயம்:


மேலும் தனியார் பள்ளி  வேனில் இருந்த மாணவிகள் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து பனவடலிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக  உயிரிழந்த ஐந்து பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாணவிகள் 4 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தகவல் அறிந்த தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், கோட்டாட்சி தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த கோர  விபத்து தொடர்பான  சிசிடிவி காட்சிகளும் வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் பள்ளி வாகனம்  அதிவேகமாக வந்து கொண்டிருக்கும் பொழுது முன்னால் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்  நிலை தடுமாறி கீழே விழுகிறார். அப்போது அவர் மீது வேன் மோதாமல் இருக்க வேன் டிரைவர் வேனை வலதுபுறம் நோக்கி திரும்பும் பொழுது எதிர் திசையில் அதிவேகமாக வந்துக்கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.. 




இந்த காட்சிகளின் அடிப்படையில் வேன் டிரைவர் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் கோடை விடுமுறை என்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி வாகனத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வந்தது ஏன்? சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்கள் வீடு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டதா?


பள்ளி வாகனம் குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாக வந்ததா?  சம்பந்தப்பட்ட பள்ளியும் விதிமீறிலில் ஈடுபட்டுள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நேரம் என்பதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஒரு புறம் ஆய்வு செய்து வரும் நிலையில் விதிகளை மீறி பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதும், அதனால் இன்று ஏற்பட்ட விபத்தில் 4  மாணவிகள் காயமடைந்ததுடன் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



யூடியூபில் வீடியோக்களை காண