இலங்கை அரசின் கெடுபிடிகள் காரணமாக தமிழக மீனவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாகத் தமிழக மீனவர்களும், இந்திய மீனவர்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்களும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறியும், இந்திய இழுவைப்படகு மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதாக குற்றச்சாட்டு கூறியும், இதைக்  கண்டித்து யாழ்ப்பாணத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல், யாழ்ப்பாணம் ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. தற்பொழுது அங்கு ஏ9 வீதி முடங்கிய நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காணப்படுகின்றன. இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.




யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது. இந்த போராட்டத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாக கூறும் யாழ் மீனவர்கள், இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது, கைது செய்த படகுகளைப் விடக்கூடாது போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.அதே வேளையில், ராமேசுவரம் மீனவர்கள் இன்று 5-வது நாளாகவும், மண்டபம் மீனவர்கள் 3-வது நாளாகவும் இங்கு  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த 18-ந்தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.




அதன் தொடர்ச்சியாக 19ஆம் தேதி மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் 69 பேரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறைபிடிக்கப்பட்ட 69 மீனவர்கள், அவரது விசைப்படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர். அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 19-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மேலும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ராமேசுவரம் மீனவர்களை தொடர்ந்து மண்டபம் பகுதி மீனவர்களும் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் நேற்று முன் தினம் முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவ சங்கங்கள் சார்பில் நேற்று முன் தினம்  உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.




அவர்கள் கச்சத்தீவை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 69 பேரையும், அவர்களது விசைப்படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். அந்த போராட்டத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் 1-ந்தேதி மாலை ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயிலை தங்கச்சிமடத்தில் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமான படகுகளுக்கு அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், தமிழக மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன்பிடிக்க கச்சத்தீவை மீட்க வழிவகை செய்ய வேண்டும், தடைப்பட்டுள்ள இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கடலோர மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.



இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  அந்நாட்டு  கடற்தொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை  பாராட்டுவதாக தெரிவித்திருந்தார். அவரின் இந்த  பேச்சுக்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் இன்று 5-வது நாளாகவும், மண்டபம் மீனவர்கள் 3-வது நாளாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் பாம்பன் பகுதி மீனவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர்.



இதனால், ராமேசுவரம், மண்டபம், பாம்பனை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் ராமேசுவரத்தில் 820 விசைப்படகுகளும், மண்டபத்தில் 500 விசைப்படகுகளும், பாம்பனில் 105 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த 3 பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு மீன் வர்த்தகம் ரூ.4 கோடி வரை நடைபெறும். மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் தற்போது வரை ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தால் ராமேசுவரம், மண்படம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 7 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பது மட்டுமின்றி, இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறும் 20 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில்,  இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பு செய்வதால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் நடுக்கடலில் நடக்கும் எல்லை பிரச்சனையை இரு நாட்டு மீனவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைகளுக்கிடையே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரு நாட்டு மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், தமிழக மீனவர்கள் மீதான  தாக்குதலும், கைது நடவடிக்கையும் நீடித்து கொண்டு இருக்கிறது. மேலும், தொப்புள் கொடி உறவுகள் என கூறப்படும் இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே ஆன உறவில் விரிசல் ஏற்படுவது போல   மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி போராட்டங்களில் ஈடுபடுவது  என இந்த நிலை நீடித்தால், இருநாட்டு மீனவர்களின் நல்லுறவிற்கு பாதிப்பு ஏற்படும் என அச்சம் எழுந்துள்ளது.