கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக சென்ற ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 62 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழக மீனவர்கள் 62 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள்  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ராமேஸ்வரம் மீனவர்கள் தூத்துக்குடியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.



 

இதையடுத்து ராமேஸவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் ஜேசுராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும்  கைது செய்யும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர் 62 பேருக்கு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே மீனவர்களை மீட்கும் பொருட்டு மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளோம். மீனவர்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சரை சந்திக்க நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்‌. மீன்பிடி எல்லை என வரையறுக்கப்பட்டுள்ள பகுதி மிக குறுகிய கடல் நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள்ளாகவே இருப்பதால் இதுபோன்று மீனவர்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. எனவே இரு நாட்டு மீனவர்களும் பாரம்பரியமான பகுதியில் தொடர்ந்து மீன்பிடி தொழில் செய்ய சுமுக தீர்வு எட்டி தரவேண்டும் என்றார்.



 

இதையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்,தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுடன் ராமேஸ்வரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மீன்வளத் துறையின் சார்பிலும் அதிகாரிகள் டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்‌. தமிழக மீனவர்கள் மீது தொடரும் இந்த தாக்குதலை நிறுத்துவதற்கு நிரந்தர தீர்வு எட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.