மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரையைச் சேர்ந்த ஐந்து மீனவர்களையும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தை சேர்ந்த ஆறு மீனவர்களையும் என மொத்தம் 11 மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 3ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை, எல்லை தாண்டி இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்ததாக, ஒரு மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்து மயிலட்டி துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 ந் தேதியான இன்று வரை சிறைக்காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல, கடந்த 11ஆம் தேதி மாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை காரை நகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள மயிலிட்டி கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவுபடி, 15ஆம் தேதியான இன்று வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை எடுத்து இவர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 11 பேருக்கும் இன்றுடன் சிறை காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று இரண்டாம் முறையாக அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் அவர்கள் மீது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தது மற்றும் அந்நாட்டு மீன் வளங்களை சேதப்படுத்தியது என வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இன்று நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை செய்து நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து ஓரிரு நாட்களில் மீனவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்