திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ராமையன்பட்டி மற்றும் அரசு புது காலனி பகுதியில் 16 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய நிழல் குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ராமையன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வேண்டியும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டிய கோரிக்கை மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லை சட்டமன்ற தொகுதியில் அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தி வருவதாகவும், பாளையங்கோட்டை பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை இராமையன்பட்டி பகுதியில் கால்நடை கல்லூரி போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், நெல்லை சட்டமன்றத் தொகுதிக்குப்பட்ட மானூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவுடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதற்கான அனுமதி வழங்கி கல்லூரியும் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சுத்தமல்லி பகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதிமுகவில் இரு தரப்பினருக்கான சண்டை நடந்து வந்ததால் தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதி ஜனதா கட்சியின் நிலைப்பாடு.
அதிமுக கோஷ்டி பூசல் விவகாரத்தில் பாஜக வருத்தம் அளிக்கிறது. அதிமுகவில் உள்ள இரு தரப்பில் யாருக்கும் பாரதிய ஜனதா கட்சி சாதகமாக செயல்படவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் அருகே நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடக்காமல் திமுக அரசு பார்த்திருக்க வேண்டும். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கும் அளவிற்கு திமுக அரசு சென்றிருக்கக் கூடாது. திமுகவிற்கு எதிர்க்கட்சியாகவே பாரதிய ஜனதா கட்சி உள்ளது. எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எண்ணிக்கை தேவை இல்லை. ஒருவர் எதிர்ப்பு இருந்தாலும் எதிர்ப்பு எதிர்ப்பு தான். அதிமுக வலுவாக இருக்க வேண்டுமென்றால் இணைந்த கைகளாக இருந்தால் நன்றாக இருக்கும். அதிமுக தலைமைக்கு யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து என தெரிவித்தார். மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தட்டிய விவகாரத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு கெடு விதித்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பேசி இருந்த நிலையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தட்டிய விவகாரத்தை பெரிதாக்க வேண்டிய தேவை இல்லை. இயல்பாக நடந்து கொண்டதை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்