நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவிபெறும் பள்ளியான சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியராக ஜெபா என்ற கிறிஸ்தோபர் ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார், இவர் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்பு எடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வகுப்பில் சில மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதில் ஒரு மாணவியிடம் தலைமை ஆசிரியர் நெருக்கமாக பழக முயற்சி செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மற்ற மாணவிகளிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்களும் தங்களிடமும் தலைமையாசிரியர் தவறாக பழக முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி வாட்ஸ்ஆப் சாட் மூலம் ஆபாசமாக பேசி வந்து உள்ளார். இதனால் பயந்து போன மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்து உள்ளார். வர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைமையாசிரியரை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இந்த சூழலில் நேற்று மாணவியின் பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர், மேலும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாணவிகளின் பெற்றோர் கூறியுள்ளனர். சூதாரித்துக் கொண்ட பள்ளி தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை அணுகி இச்சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க 3 லட்சம் ரூபாய் தருவதாகவும் இதனை அப்படியே வெளியே தெரியாமல் மறைக்குமாறும் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி நிர்வாகம் திருநெல்வேலி திருமண்டலம் டயோசீசனுக்கு புகார் தெரிவித்து உள்ளனர்.
புகாரின் அடிப்படையில் டயோசீசன் நிர்வாக மேலாளர் புஷ்பராஜ் சஸ்பெண்ட் தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தெரிந்த கொண்ட ஜெபா என்ற கிறிஸ்தோபர் ஜெயக்குமார் தற்போது தலைமறைவாகி விட்டார். மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் திசையன்விளை காவல்நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல படிக்க செல்லும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்யும் ஒவ்வொருவரையும் திருத்த காவல்துறையும் அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.