தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் ஜேக்கப். உடன்பிறந்தவர்கள் 14 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். பத்தாவதாக பிறந்த இரட்டை குழந்தைகளுள் ஒருவர் ஜேக்கப், கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இந்த இரட்டை குழந்தைகளுக்கு ஏசா, யாக்கோபு என பெயர் வைக்கப்பட்டது, அதில் ஏசா சில மாதங்களிலேயே இறந்த நிலையில் "ராஜாவின் கோவில் சந்தோஷம் ஜேக்கப்" என்பதின்  சுருக்கமாக ஆர்.எஸ் ஜேக்கப் என அழைக்கப்பட்டு வந்தார். 





புதியம்புத்தூரில் உயர் கல்வியை படிக்கும் போதே தாய் காலமானார்,  இதனால் அவரது பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்தார். கற்கும் ஆர்வம் அதிகரிக்கவே திருநெல்வேலியில் அரசு போதனாமுறை பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஈராண்டுகள் பயின்றார். தொடர்ந்து சிறுவர் ஊழியராகப் பணிபுரிந்து கொண்டே திருநெல்வேலி சைவசித்தாந்தக் கழகத்தில் சேர்ந்து பயின்று தமிழில் வித்வான் பட்டம் பெற்றார். படிப்பை முடித்தவுடன் நைனாபுரம் கிராமத்தில் ஆசிரியப் பணி கிடைத்தது. "சமுதாயத்தைத் தனது நற்பணியால் முன்னேற்ற வேண்டும்" என்று கனவுகண்ட ஜேக்கபுக்கு, அப்பொறுப்பு மகிழ்வைத் தந்தது. அந்தக் கனவுகளுடன் அக்கிராமத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது. கிராமமே பணம்படைத்த பண்ணையார் ஒருவரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது.


மாணவர்கள் கல்வி பயில்வதை முற்றிலுமாகத் தடை செய்த பண்ணையார், மாணவர்களையும், பெற்றோரையும் தன் பண்ணையில் வேலையாட்களாகக் கொத்தடிமைபோல் நடத்திவந்தார். அது கண்டு பொறுக்காத ஜேக்கப், பண்ணையாரை எதிர்த்தார். பண்ணையார் அதனை விரும்பவில்லை. மிகவும் செல்வாக்குப் படைத்திருந்த அவர் தனது அரசியல் தொடர்புகள் மூலம் ஜேக்கபுக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார். அதையெல்லாம் சமாளித்துப் பணிகளைத் தொடர்ந்தார் ஜேக்கப். நூலகத்துக்குச் சென்று வாசிப்பதும், குறிப்புகள் எடுப்பதும் ஜேக்கப்பின் வழக்கமாக இருந்தது, வாசிப்பும் வாழ்க்கை அனுபங்களும் அவரை எழுதத் தூண்டின. இவர் எழுதிய முதல் சிறுகதையான 'பாஞ்சைப்புலிகள்', 1947ல் 'தினசரி மடல்' என்ற வார இதழில் வெளியானது. 'ஆர்.எஸ். கோபு' என்ற பெயரில் எழுதியிருந்தார்.


அதற்குக் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து எழுதக் காரணமானது. பல நாள், வார, மாத இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதினார். தமிழ் மணி, சிற்பி, தாமரை, ஜனசக்தி, பிரசண்ட விகடன், நிருபம், சுடரொளி போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின. முதல் சிறுகதைத் தொகுப்பு 'மோசம்போன மோதிரம்' 1949ல் வெளியானது. இரண்டாவது தொகுப்பு 'கிறிஸ்தவர்களும் ஜாதியும்' 1952ல் வெளியானது. தொடர்ந்து 'நூறு த்ருஷ்டாந்தக் கதைகள்', 'நூறு ஜீவனுள்ள கதைகள்', 'நூறு அருளுரைக் கதைகள்' எனப் பல தொகுப்புகள் வெளியாகின.




இந்நிலையில் நெல்லையில் நிகழ்ந்த ரயில் கவிழ்ப்புச் சம்பவத்தால் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டது. பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர் ஜேக்கப். இயக்கம் சார்ந்த பலர் அவரது நண்பர்களாக இருந்தனர். தடை செய்யப்பட்டிருந்த அவ்வியக்கத்தினர் ரகசியக்கூட்டம் நடத்த பள்ளி வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார் ஜேக்கப். நாளடைவில் அவரும் சதி வழக்கில் உடந்தை என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதற்கு ஆதாரமாக ஜேக்கப் எழுதியிருந்த நாட்குறிப்பையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ஜேக்கப் சிறையில் அடைக்கப்பட்டார். பாளையங்கோட்டை கொக்கிரகுளம், மதுரை சிறைச்சாலைகளில் கடும் சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார். பிரபல வழக்கறிஞர் என்.டி. வானமாமலை சதி வழக்கில் கைது செய்யப் பட்டவர்களுக்காக வாதாடினார்.




வழக்கை மிகக் கூர்மையாக விசாரித்து வந்த நீதிபதி வி சுப்ரமணிய நாடார், தீர்ப்பு வழங்கும் முன் கோடை விடுமுறைக்காகக் கொடைக்கானல் செல்லும்போது ஜேக்கப் எழுதிய டைரிகள் அனைத்தையும் உடன் எடுத்துச் சென்றார். கிடைத்த நேரத்தில் ஜேக்கபின் டைரிக் குறிப்புகளை வாசித்தார். ஜேக்கப் அதில், கிராமத்தில் மக்கள் கொத்தடிமைகளாக இருந்ததையும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கத் தான் எடுத்த முயற்சிகளையும், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியதையும், இம்முயற்சிகளுக்குப் பண்ணையார் எதிராக இருந்ததையும், அதையும் மீறித் தான் அவர்களைப் பள்ளியில் சேர்த்துப் போதித்ததையும் பற்றி விரிவாக எழுதி இருந்தார். இறுதியில் இம்மாதிரியான பணிகளைச் செய்ய உதவிய கர்த்தருக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்ததும் மனம் நெகிழ்ந்தார் நீதிபதி. ஜேக்கப் தீவிரவாதியோ, குற்றவாளியோ, சதிகாரரோ அல்ல; இயேசுவின் வழி நின்று வறியவர்களுக்காக மனமிரங்கி உதவிய 'ஏழை பங்காளன்' என்பதாக உணர்ந்தார். விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பியதும் ஜேக்கப் குற்றவாளியல்ல என்று அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.


1952ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்தார் ஜேக்கப். நெல்லை சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 95 பேரில் இருவர் மட்டுமே தற்போது உள்ளனர். ஒருவர் ஆர். நல்லகண்ணு. மற்றொருவர் ஆர்.எஸ். ஜேக்கப். சிறைவாசத்தால் அரசு ஆசிரியர் பணியை ஜேக்கப் இழந்தார். உள்ளத்தை இறைப்பணியில் செலுத்தி அந்த மன அழுத்ததிலிருந்து மீண்டார். சிலகாலம் கிறிஸ்தவ இறையியல் தொண்டராகப் பணியாற்றியவர், பின் மீண்டும் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்துப் பணியைத் தொடர்ந்தார். 1956ல், வயலட் மேரி பிளாரன்சுடன் திருமணம் நிகழ்ந்தது. மனைவியும் ஆசிரியப் பணியாற்றினார்.




சதி வழக்கில் கைது செய்யப்படும் வரை உள்ள சம்பவங்களை, 'வாத்தியார்' நாவலிலும், சிறை சித்திரவதைகளைப் பற்றி 'மரண வாயிலில்' என்ற நாவலிலும் எழுதி இருக்கிறார். இவரது சிறுகதைளும் குறிப்பிடத்தக்கனவே. 'ஒலிக்கவில்லை', 'சொல்லும் செயலும்', 'பட்டுப் பாவாடை', 'வரவேற்கப்படாத விருந்தாளி', 'யானை மெழுகுவர்த்தி' போன்றவை வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருங்கே பெற்ற சிறுகதைகளாகும். 'அக்கா வீட்டிற்குப் போனேன்', 'பட்டணப் பிரவேசம்', 'கிறுக்கன்' போன்ற சிறுகதைகள் பரவலாகப் பாராட்டப்பட்டவை ஆகும்.


கதீட்ரல், தூய யோவான் பள்ளிகளில் பணியாற்றிய ஜேக்கப், 1985ல் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் முழுக்க இறையியல் பணியாளராகவும், எழுத்தாளராகவும், இதழாளராகவும் பணிகளைத் தொடர்ந்தார். தமிழில் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே வெளிவரும் கிறிஸ்தவ சமய இதழான 'நற்போதகம்' இதழின் ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. சிறுவர் சுடரொளி, பாலியர் நேசன், மனைமலர் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.




'நகைமொழிக் கதைகள் நானூறு' (நான்கு பாகங்கள்), 'ஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள்' (பல பாகங்கள்), ஒரு வாத்தியாரின் டைரி, படைப்பாளியின் டைரி, சின்ன சின்ன கதைகள் பெரிய பெரிய உண்மைகள், மணமும் குணமும், பக்தியூட்டும் பல்சுவைக் கதைகள், சான்றோரின் வாழ்வில் ஒரு நாள் நடந்த கதைகள், அருமையான பிரசங்க ஆதாரக் கதைகள், நெல்லைச் சரிதைக் கதைகள், கரிசல்காட்டுக் கதைகள், ஆர்வமூட்டும் அருட்கதைகள், உயரிய உண்மைக் கதைகள், உயிரூட்டும் உண்மைக் கதைகள், சாட்சிக்கு ஒரு சாட்டை, சுவையான செய்திக் கதைகள் ஐநுாறு, உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நல்ல கதைகள், இளம் தம்பதிகளுக்கு இனிக்கும் செய்திகள், திருச்சபைத் தொண்டர்கள், நெல்லை அப்போஸ்தலம் ரேனியஸ் போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் சிலவாகும். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து பலர் எம்.ஃபில், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.




மேலும் இவர் சிறந்த சொற்பொழிவாளர், பேச்சாற்றல் மிக்கவர். இலக்கிய வட்டத்தின் சார்பாக, 'இலக்கியச் செல்வர்', உலகக் கிறிஸ்தவத் தமிழர் பேரவை வழங்கிய 'அருட்கலைஞர்', கிறிஸ்துவக் கலைக்கழகம் வழங்கிய 'இலக்கியத் தென்றல்' உள்ளிட்ட பல சிறப்புப் பட்டங்களும் பதக்கங்களும் பெற்றவர்.




தமிழ் இலக்கிய உலகின் மிகமூத்த படைப்பாளியான 96 வயதுடைய இவர் பாளையங்கோட்டை சாந்தி நகரில் வசித்து வருகிறார். பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் தனக்கென தனி முத்திரை பதித்த ஆர்.எஸ். ஜேக்கப் நேற்று இரவு 11 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானார், இவரின் உடல் இன்று மாலை 4 மணிக்கு பாளையங்கோட்டையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் அவர் இறந்த செய்தி அறிந்த நண்பர்கள், எழுத்தாளர்கள், உறவினர்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்,