வ.உ.சியின் பிறந்த நாள் முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அதைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்பொழுது, "தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று இல்லாது உரிமை பெற்று விடுதலை பெற்று தன் நாட்டு மக்களும் பெருமையோடு வாழ வேண்டும் என்பதற்காக எல்லா செல்வங்களையும் இழந்து இறுதி காலத்தில் வறுமையில் வாடி மண்ணெண்ணெய் விற்று வாழ்ந்தார். மாடு கூட இழுக்க திணருகிற  செக்கை இந்த மண்ணின் விடுதலைக்காக ஒரு மனிதர் இழுத்தார் என்பதை கதையாசிரியர்கள் கூட கற்பனையில் எழுத முடியாது" என்று தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய அவர், "திருச்செந்தூர் கோயிலில் குருமார்கள் சமஸ்கிருதம் மந்திரம் சொல்லும் போது நான் அமைதியாக இருந்ததாக கூறுகிறீர்கள், அதே குருமார்கள் தமிழிலும் மந்திரம் சொன்னார்கள்.  இவர்களை பணிநியமணம் செய்தது யார்? இத்தனை ஆண்டு அவர்களை கோயிலில் விட்டது யார்? எனக்கு தமிழ் பற்றையும், தமிழ் மொழியையும் எந்த கொம்பனும் சொல்லி தர வேண்டியதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் கனிமவள கொள்ளை நடப்பதில்லை. அதனால் தான் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேசுகிறார்கள். முல்லை பெரியாறு அணைக்கு  கீழே பேபி அணையில் உள்ள மரத்தை வெட்ட 40 ஆண்டுகளாக தமிழக அரசு மனு அளித்தும் கேரளா சம்மதிக்கவில்லை. மரத்தை வெட்ட அனுமதிக்காத கேரளா தமிழ்நாட்டில் மலையை வெட்டி கொண்டு போறாங்க. ஏன் உங்கள மாநிலத்தில் மலையை ஏன் வெட்டவில்லை. கனிமவள கொள்ளைக்கு யார் அனுமதி கொடுத்தார்கள். எடப்பாடி அரசு, ஜெயலலிதா அரசு, தற்போது ஸ்டாலின் அரசு தான் அனுமதி கொடுத்துள்ளது. விடியல் அரசு என்பது வெறும் வார்த்தை தான் 696 கோடி ரூபாயில் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால் விவாசாயி உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய கட்டமைப்பு இல்லை. இதே அரசுதான் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு பணம் இல்லை என்று கூறியது. பிறகு எந்த பணத்தை வைத்து மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். இது தேவையா? எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுகிறார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுகிறார்கள்.




இதே ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலையை எதிர்த்தார். தற்போது இந்த திட்டத்தை பயண நேரம் குறைப்புச் சாலையாக மாற்றியுள்ளனர். மத்திய அரசிடம் சொந்தமாக விமானம் இல்லை. ஆனால் 5 ஆயிரம் ஏக்கரில் புதிதாக விமான நிலையம் கட்டப் போகிறார்களாம். நான் ஏற்கனவே கூறியது போன்று நான் இருக்கும் வரை புதிய விமான நிலையத்தை கட்ட விட மாட்டேன். எனக்கு வேறு ஒரு வேலை கிடையாது. எந்த பயமும் கிடையாது. அங்கேயே நான் படுத்துக் கொள்வேன். விமான நிலையம் கட்டுவதற்கு 40 ஆயிரம் கோடியில் குறைந்தபட்சம் 15000 கோடி கமிஷன் அடிக்க பார்க்கிறார்கள். இயேசுவை போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காட்ட மாட்டேன் பதிலடி கொடுப்பேன் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். பொதுவாக கொங்கு மண்ணைச் சேர்ந்தவர்கள் சாந்தமாக இருப்பார்கள். ஆனால் தம்பி அண்ணாமலை ஏன் இது போன்று பேசினார் என்று தெரியவில்லை.




ராகுல் காந்தி நடைபயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏற்கனவே 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டை பிச்சை எடுக்க வைத்து விட்டனர். மன்மோகன் சிங் தலைமையான ஆட்சியில் சகிக்க முடியாத அளவுக்கு ஊழல், லஞ்சத்தை செய்ததால் தான் மக்கள் பாஜகவை ஆட்சியில் வைத்தனர்.  ராகுல் காந்தி நடக்க வேண்டும், கிராமம் கிராமமாக, ஊர் ஊராக நடக்க வேண்டும். நடந்தால் தான் மக்களின் கஷ்டம் அவருக்கு தெரியும். சாலையின் இருபக்கமும் இருக்கிற மக்களை பார்க்க வேண்டும், அப்போது தான் எவ்வளவு வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், எத்தனை பேர் இரவு உணவு இல்லாமல் தூங்குகின்றனர், படுக்க வீடு இல்லாமல் இருக்கின்றனர். வேலை வட்டி இல்லாமல் எத்தனை பேர் நாட்டில் அலைகின்றனர். ஐந்து ஆண்டுகள் நடந்த பிறகு புத்தருக்கு ஞானம் வந்தது போன்று ராகுலுக்கும் ஞானம் வருகிறதா என்று பார்ப்போம்? டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது எனக்கு மரியாதை உண்டு. குறிப்பாக டெல்லியில் கல்வித்தரத்தை உயர்த்தியுள்ளார். நான் மதிக்கும் தலைவர்களில் கெஜ்ரிவாலும் ஒருவர். மாணவர்களை கையேந்த வைப்பது தான் புதுமைப்பெண் திட்டமா? முதலில் தரமான கல்வியை கொடுங்கள். அரசை நடத்துபவர்கள் தரம் கெட்டவர்களாக உள்ளனர். இந்த ஆயிரம் ரூபாயை வைத்து சிலிண்டர் கூட வாங்க முடியாது, அதற்கும் 150 ரூபாய் குறையும். பாஸ்ட் ஃபுட் மாதிரி முதல்வரின் வருகை ஓட்டி ஆங்காங்கே பாஸ்ட் ரோடுகள் போடப்படுகிறது. அதனால் தான் சாலையில் இருக்கும் மோட்டார் சைக்கிளை கூட அகற்றாமல் அதன் மீது சாலை போட்டுள்ளனர்" என்று விமர்சனம் செய்தார்.