வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது  திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு கூறும் பொழுது, இந்திய சுதந்திரத்திற்காக முக்கியமாக பாடுபட்ட மண் எது என்றால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டத்திற்கு அந்த பெருமை உண்டு. இந்த மண்ணில் தான் சுப்பிரமணிய பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கனார், பூலித்தேவன், ஒண்டிவீரன், செக்கிழுத்த செம்மல் வஉசி உள்ளிட்ட தலைவர்களெல்லாம் பிறந்தனர். அப்படிப்பட்ட தியாகிகளின் நூற்றாண்டு விழாவை மறைந்த தலைவர் கலைஞர் சிறப்பாக  நடத்தினார். இன்றைய முதல்வர்  வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் விழாவை மிக சிறப்பாக நாடு போற்றும் வகையில் நடத்திக் காட்டினார். 




அவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் வஉசி மணிமண்டபத்தில் 70 லட்சம் நிதியை கொடுத்து ஒலி, ஒளி காட்சிகள் அமைப்பதற்காக முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். அந்த பணி விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி அவர் படித்த பள்ளியான மதிதா இந்துக்கல்லூரி பள்ளி நெல்லை சந்திப்பில் உள்ளது. அவர் மட்டுமின்றி சுப்பிரமணிய பாரதியாரும் அதே பள்ளியில் தான் படித்தார், இவர்கள் படித்ததை போற்றும் வகையில் நினைவு வளைவு அமைப்பதற்காக ஒரு கோடியே 40 லட்சம்  நிதி ஒதுக்கியுள்ளார். இப்போது இருக்கும் மாணவர்களுக்கு வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரது தியாகங்கள் சென்றடையும் வண்ணம் திட்டங்களை அறிவித்து சிறப்பித்தது பெருமையடையும் வண்ணம் உள்ளது. அந்த அளவில் வ உசியின் பிறந்த தினத்தில்  அதுவும் ஆசிரியர் தினமான இன்று அவருக்கு மரியாதை செய்ததில் பெருமையடைகிறேன் என்று தெரிவித்தார். 


 




தொடர்ந்து அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளது. உங்களிடம்  கொடுத்த மனுவும் அப்படியே உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அப்போது அவர் கூறும் பொழுது,  நான் பல முறை கூறியுள்ளேன். அது நாட்டிலுள்ள முக்கியமான விசயம் இல்லை அந்த செய்தி. நாட்டு மக்களுக்கு முக்கியமான செய்தி என்றால் நீங்கள் கேட்கலாம், இது அவர்களின் உட்கட்சி விவகாரம், அதற்கும் இந்த அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அவர்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக இருக்கின்றனர். அந்த பிரிவுகளில் எது சரி, தவறு என்பதை நீதிமன்றம் சென்றுள்ளனர். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் செல்கின்றனர். இதனையெல்லாம் தாண்டி தேர்தல் ஆணையம் உள்ளது. அதனையெல்லாம் முடிவு செய்து தான் அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். அதிமுக கொறடா கொடுத்த மனு மீதான நடவடிக்கை சட்டமன்றம் நடக்கும்போது தெரியும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஜனநாயக ரீதியில் மிகச் சிறப்பாக சட்டமன்றம் நடந்தது என்று ஆளுங்கட்சி, எதிர்கட்சி மட்டுமின்றி பத்திரிகையாளர்களும் பாராட்டி உள்ளனர். அந்த அடிப்படையில் தான் அனைத்து முடிவுகளும் இருக்கும் அது தான் முதல்வரின் விருப்பமும் என்று தெரிவித்தார்.