காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் நெல்லை கண்ணன் மறைவுயொட்டி நெல்லை டவுண் அம்மன் சன்னதியில் உள்ள அவரது இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் வந்து அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவரது மகன்களை கட்டி தழுவி கண்ணீர் மல்க தனது ஆறுதலை தெரிவித்தார். இதன்பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, “எதன் பொருட்டும் தன்னை தளர்த்தி கொள்ளாமல் அரசியல், பணம், பதவி என தன்னல நோக்கில் இல்லாது முழுக்க முழுக்க தமிழ் இனம் சார்ந்து நின்ற மகத்தான மாமனிதர் எங்கள் அப்பா நெல்லை கண்ணன் அவர்கள். தமிழ்த்தாய் தன் செல்ல மகனை தன் அன்பு மகனை இழந்து விட்டால் என்பது தான் உண்மை. வார்த்தையாக அவரை இழந்து விட்டோம் என்று சொல்வதற்கு இல்லை, உண்மையிலேயே மிகப்பெரிய தமிழ் பேராற்றல், பெரும் ஆளுமையை தமிழ் பேரினம் இழந்து விட்டது.
அரிதினும் அரிதாகி கொண்டு தமிழை நன்கு கற்று உணர்ந்த பேரறிஞர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. தமிழ் என்பது ஒரு கடல். அதில் கரையை கடந்தவர்கள் எவரும் இலர். ஆழ்கடல் வரை நீந்தி போனவர்களும் இல்லை. ஆனால் அப்படி கடல் முழுக்க நீந்தி பறந்து பயணம் செய்தவர் நெல்லை கண்ணன் ஐயா. அதனால் தான் அவருக்கு தமிழ் கடல் என்று அழைக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.
இந்த தலைமுறை தமிழ் எழுத படிக்க தெரியாமல் வளர்ந்து வரும் சூழ்நிலையில் இதுபோன்ற தமிழ் ஆளுமைகள் இனி வர முடியுமா என்று தெரிவித்தார். தமிழ் அறிஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, வைகோ போன்ற சில ஆளுமைகள் தான் இருக்கின்றனர். தமிழுக்கு அவர்கள் தொண்டு செய்த அளவிற்கு தமிழும், தமிழர்களும் அவர்களை பார்த்துக்கொண்டதா என்றால் அது ஐயம் தான். ஏனென்றால் இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ் அள்ளிப் பருகுபவர்களாக இல்லை. அதனால் தமிழ் அறிஞர்களின் அருமை அவர்களுக்கு தெரிவதில்லை” என்று பேசினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்