ரூ.700 கோடிக்கு கனிம வளக்கொள்ளை; வெளிப்படையான விசாரணை வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சட்டவிரோத கல் குவாரிகளுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Continues below advertisement

கனிம வளத்துறையின் ரூ.700 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் இதில் பல்வேறு முக்கிய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கு இருப்பதாக கூறி அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நெல்லை மாவட்டத்தில் உள்ள 54 கல்குவாரிகளில், அரசியல் பெரும் புள்ளிகள், அரசு உயர் அதிகாரிகள் துணையுடன் நடந்த சட்டவிரோத கனிமவளக் கொள்ளை குறித்தும், அதன்மூலம் நடைபெற்ற சுமார் ரூ.600 கோடிக்கும் அதிகமான ஊழல் முறைகேடுகள் குறித்தும் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ள ஆதாரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தினை தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனராக இருந்த நிர்மல்ராஜ் ஐஏஎஸ் அவர்கள், மாவட்டத்தில் செயல்படும் 54 கல் குவாரிகளில், முறைகேடாக இயங்கிய 53 கல் குவாரிகளில் 281 சதவீதத்திற்கும் அதிகமாக சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளை நடைபெற்று இருப்பதை கண்டறிந்தார். அதன் அடிப்படையில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ் அவர்கள், 53 கல்குவாரிகளையும்  தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். மேலும்,  சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட 24 குவாரிகளுக்கு ரூ.262 கோடியை சேரன்மகாதேவி  துணை ஆட்சியர் அபராதமாக விதித்தார்.

Continues below advertisement

அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சட்டவிரோத கல்வாரிகளுக்கு எதிராக நேர்மையாக நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் நிர்மல் ராஜ்  ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்கள் சேரன்மகாதேவி துணை ஆட்சியரால் 24 சட்டவிரோத  குவாரிகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட 262 கோடியை, 14 கோடியாகக் குறைத்தும், அந்த அபராதத் தொகையை மாதத் தவணையில் செலுத்தவும் கல்குவாரி உரிமையாளர்களுக்கு சலுகை வழங்கினார். மட்டுமின்றி, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், அதிகமான முறையில் தோண்டப்பட்ட சட்டவிரோத  கல்குவாரிகள் மீண்டும் செயல்படும் வகையில், மூடப்பட்ட கல் குவாரிகளை செயல்படவும் அனுமதி வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. 

கல்குவாரிகள் தொடர்பான இந்த சங்கிலி தொடர் மாற்றங்கள், நேர்மையான முறையில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள்,  சட்ட விரோத கல் குவாரிகள் மீண்டும் செயல்படுவதற்கான அனுமதிகள் ஆகிய இவை அனைத்தும்,  ஆட்சியாளர்களுக்கும், கனிமவளக் கொள்ளை மூலம் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்குமான தொடர்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சட்டவிரோத கல் குவாரிகளால் இயற்கை வளங்கள் சுரண்டல் மட்டுமின்றி, அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் இழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு  என ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு உண்மையான மக்கள் நலன் அரசாக இருக்குமானால் இத்தகைய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகளின் செயல்பாட்டை  தடுத்து நிறுத்த முன் வரவேண்டும். ஆனால், இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது ஆளும் கட்சியின் தொடர்பில் உள்ள பெரும்புள்ளிகள் என்பதால், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் இந்த அரசு ஊழல் முறைகேட்டிற்கு துணை போய்க்கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் செயல்படும் கல்குவாரிகளில் பல அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக  அதிகாரவர்க்க துணையுடன் இயங்கி வருகின்றன. மேலும், அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் ஒப்பந்தத்தை மீறி அதிக அளவில் கனிம வளங்களை வெட்டி கோடிக்கணக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவில் மணல், பாறைகள் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இயற்கை கனிம வளங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு நேர் மாறாக தமிழ்நாட்டில் மணல் குவாரிகள், கல் குவாரிகள் எவ்வித தடையும், வரைமுறையும் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன. பிடுங்கியது வரை லாபம் என்ற கணக்கில் குவாரி உரிமையாளர்கள் ஆட்சியாளர்களின் துணையுடன் இயற்கை வளங்களை வெட்டிக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை வளங்களை பாதுகாக்கும் கேரள மாநிலத்திற்கு இருக்கும் அக்கறையில் சிறிதுகூட தமிழக அரசுக்கு இல்லை என்பது வேதனையளிக்கிறது.

ஆகவே, அறப்போர் இயக்கம் வைத்திருக்கும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, நெல்லை மாவட்டம் உள்பட தமிழக முழுவதும் செயல்படும் கல்குவாரிகள் குறித்து வெளிப்படையான ஆய்வுகளை நடத்தி, சட்ட விரோதமாக செயல்படும்  கல்குவாரிகள் மீது விசாரணை நடத்தவேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கல் குவாரிகளுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் சாதித்தால், எஸ்டிபிஐ கட்சி அனைத்து ஜனநாயக சக்திகளையும், பொதுமக்களையும் திரட்டி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola