ஆடித்தபசு காட்சிகள்:


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11 ஆம் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் 9 ஆம்  திருநாளான  நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிலையில் 10 ஆம் திருநாளான இன்று சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் காலை கோமதி அம்மன் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் முக்கிய திருவிழாவான ஆடித்தபசு காட்சி நாளை நடைபெற உள்ளது. இதில் மாலை 6 மணி அளவில் தெற்கு ரத வீதியில் சங்கரலிங்கசுவாமி கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நாளை சங்கரன்கோவிலில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. 


போக்குவரத்து மாற்றம்:


* திருநெல்வேலி ரோடு வழியாக சங்கரன்கோவில் இராஜபாளையம், மதுரை செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருநெல்வேலி ரோடு சண்முகநல்லூர் விளக்கு வழியாக சின்னகோவிலான்குளம், நடுவகுறிச்சி, சங்கரன்கோவில் இரயில்வே பீடர் ரோடு, TB ஜங்சன் வழியாக இராஜபாளையம் செல்ல வேண்டும்.


* இராஜபாளையம் ரோடு வழியாக திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் இராஜபாளையம் சாலை State bank  சாலை வழியாக கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டுக்கடை முக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக MP House கழகுமலை ரோடு, இராமநாதபுரம் விளக்கு வலது புறம் திரும்பி  இராமநாதபுரம், நெடுங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.


* புளியங்குடி, சுரண்டை, தென்காசியில்  இருந்து திருவேங்கடம் கோவில்பட்டி செல்லும் வாகனங்கள் அனைத்தும் இராஜபாளையம் ரோடு State bank  சாலையில் உள்ளே சென்று கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டுக்கடை முக்கு வழியாக திருவேங்கடம் கோவில்பட்டி செல்ல வேண்டும்.


* கழகுமலை, திருவேங்கடம் சாலையில் இருந்து இராஜபாளையம் , தென்காசி, புளியங்குடி, சுரண்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருவேங்கடம் சாலை செல்வா சில்க்ஸ் சாலையில் வலது புறம் திரும்பி வையாபுரி மருத்துவமனை ஜங்சன், ஐந்து வீட்டுமனை வழியாக இராஜபாளையம் சாலையில் வந்து செல்ல வேண்டும்.


* தற்காலிக பேருந்து நிலையம் வந்து திரும்பி செல்லும் சிறப்பு பேருந்து தற்காலிக பேருந்து நிலையம் வரை அனுமதிக்கப்படும்.


1)திருநெல்வேலி ரோடு கோமதியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
2)இராஜபாளையம் ரோடு கல்மண்டபம்.
3)சுரண்டை ஜங்சன்.
4)புதிய பேருந்து நிலையம் சங்கரன்கோவில்


கனரக வாகனங்கள்:


லாரி, டிப்பா, டாரஸ் ட்ரைலர் போன்ற வாகனங்கள் ஆடித்தபசு அன்று காலை 07.00 மணி முதல் இரவு 12.00 மணிவரை சங்கரன்கோவில் சாலையில் வர அனுமதி இல்லை.
1. இராஜபாளையம் வழியாக வரும் கனரக வகனங்கள் பருவக்குடி வழியாக திருவேங்கடம் கோவில்பட்டி செல்ல வேண்டும்.


2. புளியங்குடி சாலையில்; புளியங்குடி சிந்தாமணியில் இருந்து இராஐபாளையம் செல்ல வேண்டும்.


3. திருநெல்வேலி சாலையில் வரும் கனரக வாகனங்கள் பனவடலிசத்திரத்தில் இருந்து   அய்யாபுரம், கழுகுமலை வழியாக செல்ல வேண்டும்.


4. சுரண்டை வழியாக  வரும் கனரக வாகனங்கள் வீரசிகாமணியில் இருந்து புளியங்குடி, சிந்தாமணி வழியாக இராஐபாளையம் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.