தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைகள் நடைபெற்று முடிந்தது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 13 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 85 பேரும், 9 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 59 பேரும், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 237 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரை 689 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 30 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 200 பேரும், 14 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கு 122 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு 78 பேர், ஒன்றிய வார்டுகளுக்கு 836 பேர், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1,244 பேர், கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கு 4,713 பேர் என மொத்தம் 2,069 பதவிகளுக்கு 6,871 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் 173 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு மொத்தம் 78 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒருவரது வேட்புமனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டு மீதி 77 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒன்றிய வார்டுகளுக்கு 839 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 47 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. களக்காடு யூனியனில் ஒருவரது மனு மட்டும் பரிசீலனைக்கு வைக்கப்பட்டது. மீதி 791 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1,245 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் 39 பேரின் மனுக்கள் தள்ளுபடி ஆனது. மீதி 1,206 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,717 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர். அதில் 86 மனுக்கள் தள்ளுபடி ஆனது. 4,628 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.