தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதனை தடுக்க எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரையிலிருந்து வாலிபர் ஒருவர் இருசக்கர அடிக்கடி தூத்துக்குடிக்கு வருவதாகவும், அந்தநபர் இங்குள்ள நபர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாகவும் டவுன் டிஎஸ்பி கணேஷுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிசிடிவி காமிரா மூலம் அவரை கண்காணித்த அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடிக்க வியூகம் வகுத்து காத்திருந்தனர். இந்நிலையில் ‘‘டிப்-டாப்பாக’’ உடையணிந்த வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார். அவர், தூத்துக்குடி வந்ததும் அவரை பின் தொடர்ந்து சென்ற டவுன் தனிப்படையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், மதுரை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மரகதவேல் மகன் மணிமாறன் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 11 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார், கஞ்சா கடத்திய நபரையும் கைது செய்தனர். இதன் மதிப்பு 3.50 லட்சம் ஆகும்.
மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு இவர் யாருக்காக இந்த கஞ்சாவை கொண்டு வந்தார்? தூத்துக்குடியில் இவரது சங்கிலி தொடர்புகளாக யார் யார் உள்ளனர்? மணிமாறனுக்கு கஞ்சா சப்ளை செய்வது யார்? இவர் கஞ்சா கடத்தும் குருவியாக செயல்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தனிப்படையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியூர்களிலிருந்து தூத்துக்குடிக்கு இதுவரை கார், வேன், பஸ், ரயில் உள்ளிட்ட வாகனங்களில் நடந்து வந்த கஞ்சா கடத்தல் தற்போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்த தொடங்கியிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயகுமார், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என 240 வழக்குகள் பதிவு செய்து 275 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான 280 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இருசக்கர வாகனத்தின் மூலம் கஞ்சா கடத்தப்படுவது குறித்து தூத்துக்குடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.