தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலையை குடைந்து அமைக்கப்பட்ட இக்குடவரை கோயில் முற்கால பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதேகாலத்தில் உருவான கழுகுமலையின் மீதுள்ள சமணப் பள்ளியும், வெட்டுவான் கோயிலும் புகழ்பெற்றவை.
"வெட்டுவான் கோயில் குறித்தும், இந்தப் பெயர் வந்ததற்கான காரணம் குறித்தும் சுவாரஸ்யமான கதையொன்று இந்தப் பகுதி மக்கள் மத்தியில் உலவி வருகிறது. பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். கல்லுக்கு உயிர் கொடுக்கும் வித்தை அறிந்த வித்தகர் அவர். அவருக்கு ஒரு மகன் இருந்தான். இருவரும் ஒருநாள் கோயில் திருவிழாவுக்குச் சென்றனர். அப்போது அவரது மகன் கூட்டத்தில் தொலைந்து போய்விட்டான். தனது மகனைப் பல இடங்களில் தேடியும் சிற்பியால் கண்டுபிடிக்க முடியவில்லை. வருடங்கள் பல உருண்டன. மகனை இழந்த துயரத்தில் 'அரைமலை' என்று அழைக்கப்படும் இந்தக் கழுகுமலைக்கு வந்த சிற்பி இங்கேயே தங்கிவிட்டார். சமண துறவிகளுக்கு வேண்டிய சிலைகளைச் செதுக்கி கொடுத்து வந்தார்.
அப்போது சிற்பியிடம் வந்த மக்கள் “இளஞ்சிற்பி ஒருவன் கற்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறான். நீ என்ன செதுக்குகிறாய்? அவன் எவ்வளவு நேர்த்தியாக சிலைகளைச் செய்கிறான் தெரியுமா?” என்று கூறினர். வருகிறவர், போகிறவர்கள் அனைவரும் அந்த இளஞ்சிற்பியைப் பற்றிப் பாராட்டிச் சொல்லவே, அவருக்குக் கோபம் தலைக்கேறியது. இளஞ்சிற்பி மீது வெறுப்பும், ஆத்திரமும் அதிகமாகியது. ஒருநாள் கோபத்துடன் இளஞ்சிற்பியை நோக்கிச் சென்ற சிற்பி, தன் கையில் வைத்திருந்த உளியால் அவரைத் தலையில் தாக்கினார். உடனே இளஞ்சிற்பி வலி தாங்கமுடியாமல், “அப்பா...” என்று அலறியபடி கீழே விழுந்தான். குரல் கேட்டதும் நடுங்கிப் போன சிற்பி ஓடிச் சென்று கீழே விழுந்தவனைத் தாங்கிக் கொண்டார். அப்போதுதான் இளஞ்சிற்பியின் முகத்தைப் பார்த்தார். ஒருகணம் துடித்துப்போனார். காரணம், திருவிழாவில் காணாமல் போன தனது மகன் தலையைத்தான் உளியால் வெட்டியிருந்தார். தனது மகன் செதுக்கியச் சிற்பங்களையும், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கோயிலையும் பார்த்து மலைத்துப் போனார் சிற்பி. தலை வெட்டப்பட்டு இறந்த தனது மகனைத் தூக்கித் தனது மடியில் போட்டுப் புலம்பினார். இதனால்தான் இந்தக் கோயில் பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன என்று செவிவழி கதைகளும் இருக்கின்றன. இதனால்தான் ‘வெட்டுவான் கோயில்’ என்று பெயர் பெற்றதாகவும் ஒரு கருத்து உண்டு. இது செவிவழிக் கதைதான் என்றாலும் கோயில் மீதான நம்பிக்கை இந்த ஊர் மக்களோடும், வாழ்வியலோடும், இந்தக் கோயிலோடும் இணைந்துவிட்டது.
மரபுச் சின்னம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் போன்று, பெரிய மலைப்பாறையை 7.50 மீட்டர் ஆழத்துக்கு சதுரமாக வெட்டி, அதன் நடுப்பகுதி கோயிலாக செதுக்கப்பட்டுள்ளது. இதை வெட்டுவான் கோயில் என அழைக்கின்றனர்.இந்த மலை தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக அரசும், மத்திய அரசும் கழுகுமலையை உலக பாரம்பரிய சின்னமாக மாற்ற முயற்சி எடுக்க வேண்டும். உலகபாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் இக்கோயில் அறிவிக்கப்பட்டால், போதிய நிதி உதவி கிடைக்கும். ஏராளமானோர் ஆராய்ச்சி மேற்கொள்ள வருவார்கள். சுற்றுலா இங்கு வளர்ச்சிபெறும். வேலைவாய்ப்பும் பெருகும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு கூறும் போது, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கழுகுமலை வெட்டுவான்கோயில் ஒற்றை கற்கோயிலாகும். கருவறையும், அர்த்தமண்டபமும் உள்ளன. பணி நிறைவுபெறாமல் உள்ளது, விமானத்தின் முதல் தளத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், விசாபகரணர், அக்கமாலையை கையில் ஏந்தி சன்னவீரம் தரித்த முருகன், சந்திரன், சூரியன் சிற்பங்கள் உள்ளன. கிரீடத்தில் உமா மகேஸ்வரர், மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், பிரம்மா உள்ளனர். மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை இங்கு மட்டுமே உள்ளது. சிற்பங்கள் அனைத்தும் புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கின்றன. விமானத்துக்கு மிகப்பெரிய நாசிக்கூடுகளும், மகரதோரணங்களும் அழகு சேர்க்கின்றன. கற்றளிக் கோயில்கள் கீழிருந்து திட்டமிட்டு கட்டி மேல் எழுப்பப்படுபவை. ஆனால் இந்த ஒற்றைக் கற்றளி, தனி ஒரு பாறையை மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது.
மலையின் கிழக்கு சரிவில் 100-க்கும் மேற்பட்ட சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இவை பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் விவரங்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்ட சமணப்பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளது. இதை உலக அளவில் பிரபலப்படுத்த, உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.