தஞ்சை மாவட்டத்தில் மின் மோட்டார் மற்றும் ஆறு வாய்க்கால் தண்ணீரை கொண்டு கடந்த மாதம் விதைதெளித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாற்றுகளை பறித்து வயலில் நடவு செய்து வருகின்றனர். குறுவை நடவுப்பணி தற்போது
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சாவூரை அடுத்த 8 எண் கரம்பை, வண்ணாரப்பேட்டை, அம்மன்பேட்டை, மனக்கரம்பை, கண்டியூர், வடகால், கள்ளப்பெரம்பூர், பனவெளி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள குறுவை பயிர்களில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. பால் பருவத்திற்கு கதிர்களில் நெல் மணிகள் வருவதற்கு முன்பு இளம் நாற்றுக்கள், இனிப்பாகவும், எலிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சுலபமாக இருக்கும், ருசியுடன் இருப்பதால், நாற்றுக்களை எலிகள் கடித்து வெட்டி துண்டாக்கி விடுகிறது. இதனால், குறுவை சாகுபடி விளைச்சல் கேள்வி குறியாகியுள்ளது.
எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள், உடனடியாக குறுவை நெற் பயிர்களை கடித்து துண்டாக்கும் எலிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி கூறுகையில், ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வந்ததால், குறுவை சாகுபடி பணி தொடங்கப்பட்டது. ஆனால், வரப்புகளை போதுமான அளவில் சீர் செய்யாமலும், எலி வளைகளை உடைத்து தாய் எலிகளையும், குட்டிகளையும் சேகரித்து அழிக்காமல் விட்டதால், எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் எலிகள் கட்டுப்படுத்த முடியாமல் பெருகியதால், குறுவை சாகுபடி கேள்வி குறியாகியுள்ளது. இது குறித்து வேளாண்மைதுறை அலுவலர்களிடம் புகாரளித்தால், அவர்கள் எலி மருந்து கொடுக்கின்றார்கள். ஆனால் எலிகள் அதனை சாப்பிடாமல், கதிர்களை மட்டும் சாப்பிட்டு துண்டாக்கி விட்டு சென்று விடுகிறது.
இதனையடுத்து எலிகளை கிட்டி வைக்கு பிடிக்க விவசாயிகள் முடிவு செய்து, ஒரத்தநாடு தாலுக்கா உளூரிலுள்ள எலி கிட்டி வைப்பவர்களை அழைத்து வந்து, ஒரு எலியை பிடிக்க 30 ரூபாய் கொடுத்து, சாகுபடி வயலில் வைத்து வருகின்றோம். குறுவை சாகுபடி செய்துள்ள வயல்களில் கதிர்கள் கடித்திருப்பதை வைத்து போதுமான அளவில் கிட்டி வைக்கப்படும். இதில் கிட்டியில் எலி சிக்கினால், அந்த எலி உயிருடன் இருந்தால், உணவுக்காக எடுத்து சென்று விடுவார்கள். இறந்து விட்டால், கரையில் போட்டு விட்டு சென்று விடுவார்கள். அதனை பறவைகள் தின்று விடும்.
ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 35 வரை நெல் மூட்டைகள் கிடைக்கும். ஆனால் எலிகள் தொல்லையால் ஒரு ஏக்கருக்கு சுமார் 20 மூட்டை கிடைப்பதே அரிதாகும். இதனால் செலவு செய்த தொகை அனைத்தும் வீணாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் வெள்ளம் வந்த போது, வயல், வரப்புகளில் தண்ணீர் நிரம்பி ஒடியது. அதனால் வரப்புகளிலுள்ள எலிகள் அனைத்து இறந்தன. அந்த வருடம் எலி தொல்லை இல்லாமல், சாகுபடி நன்றாக இருந்தது. அதன் பிறகு வரப்புகளில் எலிகளின் பெருக்கம் அதிகமாகிவிட்டது.
எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள், குறுவை சாகுபடியில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால், உடனடியாக தேவையான ரசாயன உரங்களையும், கிட்டி வைப்பவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக போதுமான கூலி கொடுத்து, வயல்களில் உள்ள எலிகளை பிடிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்தும் பயிரும் நாசமாகும் என்றார்.