கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம்ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருகின்றன.
இந்த சாலை அமைக்கப்பட்ட நாளில் இருந்தே தொடர்ந்து பல்வேறு புகார்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. இதுவரை 7 முறை பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி சேதமடைந்த பாலத்தின் ஒரு பகுதி இதுவரை சீரமைக்கப்படவில்லை.
இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அனைத்து வாகனங்களும் ஒருவழிப் பாதையில் சென்று வருகின்றன. இந்த ஒருவழி பாலத்திலும் அவ்வப்போது ஓட்டை விழுவதும், தற்காலிகமாக சரி செய்வதுமாக தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் மிகுந்த அச்சத்துடனே இந்த பாலத்தை கடந்து வருகின்றனர்.
இதேபோல் இந்த நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ரூ.29 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது. ஓராண்டு காலத்தில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி, இரு மாநில அமைச்சர்கள் விமான நிலையத்திற்கு சென்று வரும் போதெல்லாம் இந்த சாலையை உபயோகித்து வந்தாலும் கூட பராமரிப்பு இல்லாத சாலை, முடிவடையாத பாலம் என இந்த பிரச்சினைகள் தொடர தான் செய்கிறது என்கின்றனர் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்.
மேலும், தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகைகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் எப்போதும் மூடியே கிடக்கின்றன மேலும், பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்க பயன்படும் ஸ்கேனிங் கருவிகளும் அவ்வப்போது சரியாக வேலை செய்யாததால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் வேல்ராஜிடம் கேட்டபோது, வல்லநாடு ஆற்று பாலத்தை ரூ.21.43 கோடியில் சீரமைக்க டெண்டர் இறுதி செய்யப்பட்டுவிட்டது. அடுத்தவாரம் ஒப்பந்தம் போடப்பட்டு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கும். பாலத்தின் இரு பகுதிகளும் முழுமையாக சீரமைக்கப்படும். இந்த சீரமைப்பு பணிகள் 6 மாதங்களில் முடிவடையும். இதேபோல் புதுக்கோட்டை மேம்பால பணிகளை பொறுத்தவரை பாலத்தின் நடுவில் போட்டு நிரப்புவதற்காக சரள் மண் கிடைக்காத காரணத்தால் தாமதம் ஏற்பட்டது. தற்போது தேவையான சரள் மண் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பணிகள் வேகமெடுத்துள்ளன. இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் மேம்பால பணிகள் முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு தயாராகிவிடும். சுங்கச்சாவடியில் உள்ள கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரு புறங்களிலும் உள்ள கழிப்பறைகளை பராமரிக்க தனியாக ஆட்களை நியமித்து இன்னும் ஒரு வாரத்தில் கழிப்பறைகள் திறக்கப்படும். மேலும், சுங்கச்சாவடியில் நிலவும் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்றார்.