தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்களின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில் இந்த கால கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன. மீனவர்கள் தங்கள் படகுகளைச் சீரமைக்க இந்தத் தடைக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மீன்பிடி தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.மீன்பிடி தடைக் காலத்தின்போது முற்றிலுமாக தொழிலின்றி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படுகிறது. மீன்பிடிக் குறைவு காலத்தில் சிறப்பு நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் சமீபத்திய விலைவாசி உயர்வு காரணமாக நிவாரணத் தொகையை வைத்து மீனவர்கள் வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர். இதனால் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக விதிக்கப்பட்ட தடைக்காலத்தில் கேரளா விசைப்படகுகள் தூத்துக்குடி கடலில் மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும். அதே போன்று அனைத்து மீன்களும் இந்த காலகட்டத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது இல்லை. ஆகையால் தடைக்காலத்தை குறைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து மீனவர்களிடம் கேட்டபோது,மீன்பிடி தடைக்காலம் முன்பு ஒரு மாதமாக இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து விட்டார்கள். தற்போது தடைக்காலம் 61 நாட்களாக உள்ளது. கேரளாவில் 40 நாட்கள்தான் தடைக்காலமாக உள்ளது. ஆகையால் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டும்.வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் இருந்து மீன்பிடித்தல் குறைந்து இருக்கும். ஜூன் மாதத்துக்கு பிறகு மழை ஆரம்பித்து விடும். இதனால் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்றாலும், அவ்வப்போது இயற்கை சீற்றங்களால் சரிவர மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணம் உதவி போதுமானதாக இல்லை. முன்பு 40 நாட்கள் தடைக்காலம் இருந்தது. அப்போது ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. தற்போது தடைக்காலம் 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் தடைக்கால நிவாரணம் உயரவில்லை. கடந்த ஆண்டு ரூ.6 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஆகையால் தடைக்கால நிவாரண தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும் போது, மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகு, இழுவை படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 22 ஆயிரத்து 434 மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக ரூ.11 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 22 ஆயிரத்து 10 மீனவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் வருகிற 26-ந் தேதி முதல் மீனவர்கள் விவரம் சரிபார்க்கப்பட்டு, நிவாரணத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடித்தல் குறைந்த மாதங்களாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மீன்பிடித்தல் குறைந்த காலங்களுக்கு ஒரு ரேஷன்கார்டுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 25 ஆயிரத்து 242 மீனவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.
மேலும் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் சேமிப்பு நிவாரணத்தொகையும் வழங்கப்படுகிறது. அதன்படி கூட்டுறவு சங்கத்தில் மீனவர்கள் மாதம் ரூ.175 செலுத்துகின்றனர். அதன்படி மொத்தம் ரூ.1500 வரை செலுத்துகின்றனர். இதனுடன் அரசு ரூ.3 ஆயிரம் சேர்த்து ரூ.4 ஆயிரத்து 500 சேமிப்பு தொகையாக மீனவர்களுக்கு வழங்குகிறது.மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை இதுவரை பெறப்படவில்லை. அரசாணை வந்த பிறகு உயர்த்தப்பட்ட தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் மீன்பிடித் தடைக் காலத்தில் சிறப்பு நிவாரணமாக ரூ.8,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டே உயர்வுடன் கூடிய சிறப்பு நிவாரணம் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டு உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டாவது மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8000-மாக வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.