கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருவர். குறிப்பாக கோடைக்காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. வெயிலில் வெளியில் செல்வோருக்கு உடம்பில் உள்ள நீர்சத்து குறைவதால் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். அதே போல் கோடையில் அதிக தண்ணீர் அருந்துவது மற்றும் நீர் சார்ந்த ஆகாரங்களை எடுத்துக்கொள்வதன்  மூலம் நோயிலிருந்து தப்ப முடியும் என மருத்துவர்களும் அறிவுரை வழங்கி வருவர். இந்த நிலையில் மக்களின் தாகம் தீர்க்க அரசியல் கட்சிகள் ஆங்காங்கே நீர், மோர் பந்தல் திறந்து வைப்பது நடைமுறையில் இருப்பது இயல்பு.  பொதுநல நோக்கத்தோடு மக்களின் தாகத்தை ஒருபுறம் தீர்த்தாலும்,  அரசியல் கட்சியின் தலைவர்களையும்,  கட்சியின் சின்னங்களையும் மக்களின் மனதில் பதிய வைக்கும் பொருட்டு தேர்தல் நேரங்களில் ஓட்டுக்களை பெறும் சிந்தனையோடும் இது செயல்படுத்தப்படுகிறது. எனவே தான் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்படும் இடங்களில் கட்சித் தலைவரின் படங்கள், கட்சியின் சின்னங்கள், கட்சி கொடிகள்  அடங்கிய பதாகைகள் வைக்கப்படுகின்றன.




இந்த நிலையில் தான் தற்போது திசையன்விளை நேருஜி திடல் அருகே நாம் தமிழர் கட்சியினர்  தண்ணீர் பந்தல் ஒன்றை அமைத்துள்ளனர். பொதுவாக தண்ணீர் பந்தல் என்பது வெயிலில் வெளியே சென்று வரும் மக்களின் தாகத்தை தீர்க்க வைக்கப்படுவது. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தற்போது தண்ணீர் பந்தல் வைத்துள்ளனர். அந்த தண்ணீர் பந்தல் மக்களுக்கானது மட்டுமின்றி ஐந்தறிவு ஜீவிகளான ஆடு, மாடுகளுக்கும் சேர்த்து வைத்துள்ளனர். குறிப்பாக நாள்தோறும் பொதுமக்கள் மண்பானையில் தண்ணீர் அருந்தும் பொருட்டு அவர்களுக்கு மண்பானையிலும், கால்நடைகளுக்கு என பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தொட்டியிலும் தண்ணீர் எப்போதும் நிரப்பப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


கால் நடைகளுக்கான இந்த தண்ணீர் பந்தலில் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடுகள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்கள் தண்ணீர் அருந்திவிட்டு செல்கின்றன. இது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுக்காகவும், ஆடம்பர விழாவாகவும் தண்ணீர் பந்தல் அமைக்கும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில்  நாம் தமிழர் கட்சியினரின் அசத்தல் நிகழ்வாக கால்நடைகளுக்கு   தண்ணீர் பந்தல் அமைத்துள்ளது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண