நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,  தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல அளவிலான பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் உடனான சீராய்வு கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரித்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை வருவாயை உயர்த்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பத்திர பதிவுத்துறையில் உள்ள இடர்பாடுகளை களைவதற்கான ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறும் பொழுது, "வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறையின் வருவாயை பெருக்க  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இரண்டு மாத காலமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கை துறைச் செயலாளர் பதிவுத்துறை தலைவர் உள்ளிட்டோர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்த ஆண்டு 8 மாத காலத்தில் கடந்த ஆண்டை விட பதிவுத்துறையில் 2900 கோடி ரூபாய் கூடுதலாக வருவாயை பெற்று உள்ளோம். வணிக வரித்துறையில் ஏறத்தாழ கடந்த ஆண்டை விட 21,515 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக பெறப்பட்டு உள்ளது. இரண்டு துறையும் சேர்ந்து  24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகமாக பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் முதல்வரின் ஆலோசனையை பெற்று எந்ததெந்த வகையில் வருவாயை பெற்று வழிவகை செய்ய வேண்டுமோ அதனை செய்து  அரசுக்கு வர வேண்டிய வருவாயை பெற்றிருக்கிறோம். சிலர் தவறுதலாக  பதிவு செய்தனர் என ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.  எந்த வணிகர்களையும் இந்த அரசு தனிப்பட்ட முறையில் துன்புறுத்தாது. அவர்களுக்கு பாதுகாப்பாக பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இந்த அரசு இருக்கும்.  பொதுமக்களிடையே ஜி எஸ் டி வாங்குவதை அரசுக்கு செலுத்துங்கள் என்பதை தான் விழிப்புணர்வாக சொல்லி கொண்டிருக்கிறோமே தவிர எந்த வணிகர்களையும் பாதிக்கும் வகையில் இந்த அரசு இருக்காது. அவர்களை முன்னேற்ற கூடிய அளவில் தான் இருக்கும். வணிக நல வாரியம் அமைக்க இருக்கிறோம். அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு திருமண உதவி திட்டம், மருத்துவ செலவு, படிப்பு செலவு என முதல்வர் கொண்டு வந்துள்ளார்.  


ஆட்சிக்கு பின் ஏறத்தாழ 1 லட்சத்து 20 ஆயிரம் புதிய வணிகர்கள் வந்துள்ளனர். 6 லட்சத்து 73 ஆயிரம் வணிகர்கள் வணிக வரித்துறையில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.  வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று அரசின் நோக்மாக இருந்தாலும் அதனால் யாரையும் எந்த வகையிலும் அரசு துன்புறுத்தாது. தமிழ்நாட்டில் தான் பதிவுத்துறை ஒரு முன்னோடியாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் காஷ்மீரில் இருந்து இங்கு வந்து பார்த்து சென்றுள்ளனர். அதே போல ஆந்திராவில் இருந்து வந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் இருந்து வர உள்ளனர். 39 புதிதான திட்டங்களை நாம் கொண்டு வந்தது தான் இதற்கு காரணம். பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறையில் 2023 மார்ச் 30ம் தேதிக்குள் ஒன்றரை லட்சம் கோடி வருவாய் ஈட்ட  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


பத்திரப்பதிவு பிரச்சனை,  பட்டா மாறுதல் பிரச்சனைகளை தடுக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களின் கீழ் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் விதமாக புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதன் படி தமிழகம் முழுவதும் 2000 பத்திரங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. பத்திரபதிவு செய்வதற்கான தொகையை அதிகரிக்கும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை தேவைப்பட்டால் முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும்" என அவர் தெரிவித்தார்.