தூத்துக்குடி பகுதியில் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரி அறுவடையை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு ஓரளவு நல்ல மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிளையூரணி கிராமத்தில் விவசாயிகள் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மானாவாரியாக வெள்ளரி, பீர்க்கங்காய் ஆகியவற்றை பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 100 விவசாயிகள் 300 ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் வெள்ளரி மற்றும் பீர்க்கங்காய் பயிரிடுகின்றனர். புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் கடைசி) விதைகளை விதைக்கின்றனர். இவை கார்த்திகை மாதத்தில் (நவம்பர் கடைசி) அறுவடைக்கு வருகின்றன.




இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழையை நம்பி புரட்டாசி மாதம் வெள்ளரி மற்றும் பீர்க்கங்காய் விதைகளை விவசாயிகள் விதைத்துள்ளனர். மானாவாரி பயிர்களுக்கு ஏற்ற வகையில் பருவமழை பெய்துள்ளதால் வெள்ளரி மற்றும் பீங்கங்காய் பயிர்கள் வளர்ந்து தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. வெள்ளரி அறுவடை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. பீர்க்கங்காய் அறுவடை இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. அடுத்தவாரம் பீர்க்கங்காய் அறுவடையும் முழுவீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இதுகுறித்து மாப்பிளையூரணியை சேர்ந்த விவசாயி சிவா கூறும்போது, "எங்கள் கிராமத்தில் 7 தலைமுறையாக வெள்ளரி மற்றும் பீற்கங்காய் பயிரிட்டு வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள அம்மன் கோயிலில் ஆவணி மாதம் கொடை விழா நடைபெறும். அப்போது இந்த ஆண்டு விதைப்பு பணியை எந்த தேதியில் தொடங்க வேண்டும். யார் முதலில் தொடங்க வேண்டும் என்பதை சாமி கூறுவார். அந்த தேதியில் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டு குறிப்பிட்ட நபர் கோயில் வளாகத்தில் உள்ள இடத்தில் முதல் விதையை நடவு செய்வார். தொடர்ந்து அவரது நிலத்தில் விதைப்பு நடைபெறும். அதற்கு பிறகே மற்ற விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதைப்பு செய்வார்கள். இந்த பழக்கத்தை காலங்காலமாக தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.




அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 13-ம் தேதி விதைப்பை தொடங்க வேண்டும் எனவும், செம்புலிங்கம் மகன் பெரியசாமி நிலத்தில் முதல் விதைப்பு தொடங்க வேண்டும் எனவும் சாமி கூறினார். அதன்படி விதைப்பு பணி தொடங்கப்பட்டது. தற்போது வெள்ளரி அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளரியை பொறுத்தவரை 40 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். பீற்கங்காய் 50 முதல் 55 நாட்களுக்கு பிறகே அறுவடைக்கு வரும். எனவே அடுத்த ஓரிரு நாட்களில் பீர்க்கங்காய் அறுவடையும் தொடங்கும். எங்கள் பகுதியில் இந்த ஆண்டு சுமார் 300 ஏக்கரில் வெள்ளரி மற்றும் பீர்க்கங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு ரசாயன உரங்களோ, பூச்சிக் கொல்லி மருந்துகளோ பயன்படுத்துவதில்லை. ஆட்டுக் கடை மட்டுமே போடுகிறோம். நல்ல மகசூல் கிடைக்க நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். எனவே, நிலத்தில் 6 முறை உழவு செய்வோம். களைகள் அதிகம் வளரும் என்பதால் 3 முறையாவது களை எடுக்க வேண்டும். மேலும், அறுவடைக்கும் ஆட்கள் தேவைப்படும். எனவே ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகும்.




காய்களை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளுக்கும் அனுப்புகிறோம். மேலும், ஏராளமான பெண்கள் இங்கே வந்து வெள்ளரி மற்றும் பீர்க்கங்காய்களை பெட்டிகளில் வாங்கிச் சென்று சாலையோரங்களில் வைத்து வியாபாரம் செய்வார்கள். இங்குள்ள விவசாயிகளும் தங்கள் வீடுகளுக்கு முன்பு வைத்து வியாபாரம் செய்வார்கள். வெள்ளரி பீஞ்சுகளாகவும், முதிர்ந்த காய்களாகவும் வாங்கி செல்வார்கள். கிலோ ரூ.20 முதல் ரூ.40 விலை கிடைக்கும். ஒரு ஏக்கரில் தினமும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்” என்றார்.


எங்க பூமியில் 3 ஏக்கரில் வெள்ளரி மற்றும் பீர்க்கங்காய் சாகுபடி செய்து உள்ளதாக கூறும் இவர், தற்போது தினமும் ரூ.4000 வரை கிடைக்கிறது. வரும் நாட்களில் இது ரூ.8000 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த விவசாயத்தை செய்து வருகிறேன். வடகிழக்கு பருவமழையை நம்பி தான் எங்கள் விவசாயம். மழை நன்றாக இருந்தால் விளைச்சலும் நன்றாக இருக்கும். மழை இல்லையென்றால் விளைச்சலும் இருக்காது. இந்த ஆண்டு ஓரளவுக்கு நல்ல மகசூல் வந்துள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் கடைசி வரை இருக்கும் என்பதால் தை மாதம் கடைசி வரை விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.