வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்தினால் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகி விடுவதாக கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்த திடீரென தடை விதிக்கப்பட்டதால் கிராமங்களில் இருந்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து மின்கட்டணம் செலுத்த முடியமால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மின்சார வாரிய அலுவலகத்தில் தான் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் மின் கட்டணத்தினை எந்த மின்சார வாரிய அலுவலகத்தில் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் மின்கட்டணத்தினை செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இதற்கு என்று தனி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மின்சாரவாரிய அலுவலகத்தில் கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வேறு மின்வாரிய அலுவலகத்திற்குட்டப்பட்டவர்களும் கோவில்பட்டி அருகில் இருப்பதால் இங்கு வந்து மின்கட்டணம் செலுத்தி வந்தனர்.




இந்நிலையில் இன்று திடீரென கோவில்பட்டி நகரில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்த முடியாது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மின்கட்டணம் செலுத்த வந்த மக்கள் பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது உயர் அதிகாரி ஒருவர் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்துவதால் மின்கட்டணம் செலுத்தியதற்கு தரப்படும் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகிறது என்றும், எனவே இன்று முதல் வெளியூர் நபர்களுக்கு மின்கட்டணம் வாங்க கூடாது என்று கூறியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.  அதுமட்டுமின்றி மின்கட்டணம் கட்டுவதற்கு கடைசி நாள் என்பதால் மின்கட்டணம் செலுத்த வந்த கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.




ஜமீன்தேவர்குளத்தினை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் மனோகரன் என்பவர் கூறுகையில், தங்களுக்கு கலிங்கப்பட்டி மின்சாரவாரியம் என்றால் அங்கு 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அருகில் இருக்ககூடிய கோவில்பட்டி மின்சாரவாரியத்தில் 6 ஆண்டுகளாக தங்களது வங்கிக்கான மின்கட்டணத்தினை செலுத்தி வருவதாகவும், ஆனால் இன்றைக்கு வாங்க மறுத்து விட்டதாகவும், காரணம் கேட்டால் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகி விடுவதால் வெளியூர் நபர்களுக்கு வாங்க கூடாது என்று அதிகாரிகள் கூறியதாக கூறுகின்றனர். தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.