ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மறைக்கப்பட்டதாக புகார்! பக்தர்கள் அதிர்ச்சி..!


ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு புதுச்சேரி லாட்டரி சீட்டு நிறுவனம் நன்கொடையாக வழங்கிய ரூ.ஒரு கோடி மதிப்புள்ள நகைகளை மதிப்பீடு செய்யாமல் கோயில் நிர்வாகம் மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுச்சேரி லாட்டரி சீட்டு நிறுவனம் சார்பில் சிவராத்திரியன்று (மார்ச் 1) சுவாமிக்கு தங்கமணிகள் பதித்த பெரிய ருத்ராட்ச மாலை, அம்மனுக்கு வைர கற்கள் பதித்த நெக்லஸ் வழங்கப்பட்டன.


இந்நகைகளை இது வரை பதிவு செய்து மதிப்பீடு செய்யாமல் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. நகை மதிப்பீட்டிற்கு சிவகங்கையில் இருந்து அறநிலையத்துறை மதிப்பீட்டாளர் வர வேண்டும் , வைர நகைகள் மதிப்பு குறித்த பில் எதுவும் வரவில்லை எனவும் தெரிவிக்கப் பட்டது. இதனால் கோயிலுக்கு வழங்கப்பட்ட நகையை மறைக்க முயற்சி நடக்கிறதா என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


ராமேஸ்வரம் கோயிலில் தங்க ருத்ராட்ச மாலை கணக்கில் வரவில்லையா..!






ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ருத்ராட்ச மணி மாலையை மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கமான ஒன்று. கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு பொருட்களைக் காணிக்கையாகவும் நன்கொடையாகவும் கொடுத்து செல்கின்றனர்.







இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி  தொழிலதிபர் மார்டின் மற்றும் அவரது குடும்பத்தார்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு நேர்த்திக் கடனாகப் பல கோடி மதிப்பிலான தங்க ருத்ராட்ச மணி மாலையை வழங்கியுள்ளனர். இது தற்போது வரை இந்து அறநிலையத்துறை கணக்கில் வராமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிகுமாருக்குத் தெரிந்தும் கணக்கில் காட்டப்படாமல் இருந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 





 


இதனால் ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவரும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான வழக்கறிஞர் கே.ஜி. கணேஷ், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்திற்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட தங்க ருத்ராட்ச மாலையை மீட்க வேண்டும் என்றும் 60 பணியாளர்களை நியமித்ததில் ஊழல் நடந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்தை நேரடியாகச் சந்தித்து மனு அளித்துள்ளார்.இதுகுறித்து ராமநாதபுரம்  பா.ஜ., வழக்கறிஞர் கணேஷிடம் நாம் கேட்டோம்,  'கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.1 கோடிக்கும் மேலான நகையை மதிப்பீடு செய்து உடனடியாக விவரத்தை வெளியிட்டு கணக்கில் கொண்டு வராமல் காலம் கடத்தியதன் மூலம் தவறு நடந்துள்ளது. மேலும், கோயில் பணியாளர்கள் 50 பேர் நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரிக்க வேண்டும்,' என சொன்னார்.