பிரதம மந்திரி கதி சக்தி என்ற புதிய திட்டத்தை பிரமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பொருளாதார மண்டலங்களும் ஒரே தளத்தின் கீழ் பல்முனை இணைப்பு உள்கட்டமைப்புகளுடன் இணைக்கப்படவுள்ளது. 16 மத்திய அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் பல்வேறு மத்திய துறைகள் சார்பில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம், தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் நடைபெற்றது. இதில் துறைமுகம், விமான நிலையம், தெற்கு ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு கதி சக்தி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கி கூறினர்.





தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறும்போது, நமது நாட்டில் சரக்கு போக்குவரத்துக்கு 14 சதவீதம் செலவாகிறது. மேற்கத்திய நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் 6 முதல் 9 சதவீதம் மட்டுமே செலவாகிறது. எனவே இந்தியாவிலும் போக்குவரத்து செலவை 6 முதல் 9 சதவீதம் அளவுக்கு குறைக்கும் நோக்கில் 16 அமைச்சகங்களை ஒருங்கிணைத்து கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த கதி சக்தி திட்டத்தின் கீழ் வஉசி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் முக்கியமானது ரூ.7500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள வெளித்துறைமுக விரிவாக்க திட்டமாகும்.


இந்த திட்டத்தில் புதிதாக 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்கப்படுகின்றன. துறைமுக கப்பல் நுழைவு வாயில் பகுதியின் அகலம் 150 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அகலப்படுத்தப்படும். கப்பல் தளங்களின் தற்போதுள்ள மிதவை ஆழம் 16 மீட்டராக ஆழப்படுத்தப்படும்.கடலோர வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2000 ஏக்கர் நிலத்தை துறைமுகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். மேலும் 5 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.





தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் கூறும்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தற்போது சென்னைக்கு தினமும் மூன்று விமானங்களும், பெங்களூருவுக்கு வாரத்தில் 2 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 27-ம் தேதி முதல் தினசரி 5 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. சென்னைக்கு 4 விமானங்களும், பெங்களுருவுக்கு தினசரி விமானமும் இயக்கப்படுகின்றன.தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டு பணிகள் ரூ.380 கோடியில் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போதுள்ள 1350 மீட்டர் நீளம் கொண்ட ஓடுதளம் 3115 மீட்டர் நீளமாக விரிவிபடுத்தப்படுகிறது. மேலும், ஒரே நேரத்தில் 600 பயணிகளை கையாளும் வகையில் பயணிகள் முனையம் அமைக்கப்படுகிறது.


விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், தீயணைப்பு நிலையம் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. வல்லநாடு மலையில் சிக்னல் டவர் அமைக்கும் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். எனவே, இன்னும் ஓரிரு மாதங்களில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை தொடங்கப்படும்.   




தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் துணை பொதுமேலாளர் மற்றும் திட்ட இயக்குநர் சங்கர் கூறும்போது,தூத்துக்குடி நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக மாற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு பணிகள் நிறைவு பெற்று உள்ளதாகவும் விரைவில் நிலம் கையகப்படுத்தப்படும்  ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.