ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குத்துக்கல்வலசை பகுதியில் பனை ஓலைகளை பாத்திரத்தில் வேக வைத்து வண்ணச்சாயம் தீட்டி பின்னர் உலர வைத்து  பல்வேறு வகைகளில் கூடைகள், பெட்டிகள் செய்து அவைகளை வெளி மாவட்டம், வெளி மாநிலம் மட்டுமின்றி  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இதன் மூலம் தங்கள் வாழ்வும்  ஏற்றம் அடைவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.





பனையில் இருந்து வெட்டி எடுக்கப்படும் குருந்தோலை மெல்லியதாகவும், வெண்மையாகவும், மிருதுவாகவும், வழவழவப்பாகவும் இருக்கும். அதன்மேல் ஒரு எண்ணெய்ப்பசை இருக்கும்.  குருத்தோலையை ஏடு ஏடாகப் பிரித்து, வெயிலில் உலரவைத்து ஈரம் படாமல் வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். ஓலையில் ஈரம் படுமாயின் அதன் மேல் படரும் பாசி ஓலையை மஞ்சள் நிறமாக மாற்றி விடும். இந்தக்  குருத்தோலைகளைக் கொண்டு பலவகைப் பாய்கள், பெட்டிகள் கூடைகள், நாகரிகப் பொருட்கள் செய்யப்படுகின்றன. இந்த குருத்தோலைகளில் கண் கவரும் சாயங்களை ஏற்றி திருப்புல்லாணி அருகே பெண்களால் கைத்திறன் நிறைந்த பொருள்கள் செய்யப்படுகிறது.





ஒலையைக் கொண்டு பாய், பெட்டி முடைதல் பரம்பரைத் தொழிலாக இருந்து வருகிறது. பனை ஒலையில் இருந்து கூடைகள், பூந்தொட்டிகள், மலர் அலங்காரக் கூடைகள், நீர் இறைக்கப் பயன்படும் கூடைகள் போன்றவைகளும் இவர்கள்  செய்கிறார்கள். மேலும்,  குழந்தைகளுக்கு பென்சில் டப்பா, பாய் உள்ளிட்டவை செய்கின்றனர். இவை சூடு மற்றும் குளிரினால் பாதிக்கப்படாதவை. ஓலைப் பெட்டிகள் உறுதியாக இருக்கவும் நீண்ட நாட்கள் பயன்படுததுவதற்கும் அவற்றின் பின்னால் நாரைக் கொண்டு தைத்து விடுகிறார்கள். 




ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவேல மரங்கள் எவ்வளவு அடர்ந்து வளர்ந்துள்ளனவோ, அதற்கு ஈடாக பலன்தரும் பனை மரங்களும் அதிகம் உள்ளன. கன்னிராஜபுரம், பெரியநாயகிபுரம், மாரியூர், ஒப்பிலான், வாலிநோக்கம், ஏராந்தரவை, மங்களேஸ்வரி நகர், சேதுக்கரை, பனைகுளம், அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், தினைகுளம், கொல்லந்தோப்பு, மாயாகுளம், காஞ்சிரங்குடி, ஆற்றாங்கரை, ரெகுநாதபுரம், ஏர்வாடி தொடங்கி சாயல்குடி, ஏர்வாடி, உச்சிப்புளி, பிறப்பன்வலசை, என்மனம்கொன்றான், சீனியப்பா தர்கா, வேதாளை ஆகிய இடங்களில் பனை மரங்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.




பனையிலிருந்து கிடைக்கும் பனை ஓலையில் செய்யப்படும் அழகு நிறைந்த கலைப் பொருட்களுக்கு தற்போது அதிக மவுசு ஏற்பட்டிருக்கிறது. அவை மக்களுக்கு அத்தியாவசியமாக பயன்படவும் செய்கிறது. கண்களைக் கவரும் அந்த பொருட்களை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். பனை ஓலையில் பயனுள்ள கலைப்பொருட்களை தயாரிக்கும் பணியில் திருப்புல்லாணி பகுதியில் உள்ள 'குத்துக்கால் வலசை' கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் பனை ஓலையில் கூடை, தட்டு வகைகள், மணிபர்ஸ், குப்பைக்கூடை, வெங்காய கூடை, விதவிதமான விசிறிகள், பூக்கூடைகள், அலங்கார பொருட்கள் வைப்பதற்கான கூண்டுகள், தொப்பி, பாய், குழந்தைகளை மகிழ்விக்கும் கிலுக்குகள், பேனா வைக்கும் கூடுகள் உள்ளிட்ட 25 வகையான பொருட்களை கலைநயத்தோடு தயார் செய்கிறார்கள்.



இவர்களால் தயாரிக்கப்படும் பனை ஓலை பொருட்கள் உள்ளூரில் விற்பனையாவது  மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக, திருச்செந்தூர், ராமேஸ்வரம் மற்றும்  கன்னியாகுமரி போன்ற சுற்றுலா  தலங்களுக்கு  விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தனியார் ஏற்றுமதியாளர்கள்  மூலம் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்களது நிரந்தர வருவாய் கிடைத்து வாழ்வாதாரம் காக்கப்படுவதாக கூறுகின்றனர்.




இது குறித்து அந்தப்பெண்கள் கூறுகையில், பனை பொருட்கள் தயாரிப்புக்கு அரசு முக்கியத்துவம் தருவதில்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பனை பொருட்களை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். இதனால், பயன்களே அதிகம். பனை ஓலை தொப்பிகளை அணிவதால் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. பனை ஓலையின் குளிர்ச்சி உடலுக்கு ஏற்றது. பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆர்டரின் பேரில் பனை ஓலை பொருட்கள் தயாரித்து கொடுக்கிறோம். இப்போது, பனை பொருட்களை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உடலுக்கும், உள்ளத்திற்கும் ஏற்ற பனை பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கூட்டுறவு சங்கங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.