தமிழனின் பாரம்பரிய உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இந்த நன்நாளில் பண்டைய கால விவசாயிகள் பயன்படுத்திய பல்வேறு உழவு தொழில் உபகரணங்களை இன்றும் கூட பத்திரமாக பாதுகாத்து வரும் குமரி மாவட்ட விவசாயி குறித்த சிறப்பு கட்டுரை.



பண்டையகாலம் முதல் மனித வாழ்க்கையில், வாழ்வதற்கு அவசியமான ஒன்றாக விவசாயம் கருதப்பட்டதால் தமிழர்களின்  வாழ்க்கையின்  முதன்மை   பகுதியாக விளங்கியது வேளாண்மை.  அனைத்து தொழில்களையும்  விட வேளாண்மை பொருமைக்குரியதாகவும்  விவசாயி போற்றுதலுக்கு உரியவனாகவும்  விளங்கினான்.  சுயமரியாதையுடன்  வாழ்ந்து வந்த விவசாயி, தனது நிலத்தில் விவசாயம் செய்ய தேவையான கருவிகளை தானே தயாரித்து பயன்படுத்தியுள்ளான். அதன் அளவு, செயல்திறன், முக்கியத்துவம், சுயமாக பணிசெய்யும்  திறன் என அனைத்து தரப்பிலும் சமரசம் இல்லாத விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மண் தன்மைக்கு ஏற்ப விவசாயமும், அதற்காக மண் செம்மைபடுத்துதல், முதல் விளைபொருட்கள் அறுவடை செய்யும் வரையிலும் அதற்கு தேவையான உபகரணங்கள் பல வடிவங்களில் தயாரித்து பயன்படுத்தியுள்ளான்.  அதே போன்று  நீர்ப்பாசனம், உழவு, எருவிடுதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றில் முன்னேற்றத்துடனும் செயல்திறன் கொண்டதாகவும் இருந்தது.



உழுதல், விதைத்தல்,  உரமிடுதல், களையெடுப்பு, நீர்ப்பாசனம், பயிா் பாதுகாப்பு ஆகியவற்றைச் சரியான முறையில் செய்வதற்கு  பயன்படுத்தப்பட்ட கருவிகள் காலப்போக்கில்   வேளாண்மை புரட்சிக்கு பின்னர் நவீனப்படுத்தப்பட்ட  கருவிகளாக,  என்ஜின் பொருத்தப்பட்ட எந்திரங்களாக உருவெடுத்துள்ளன. இதன் காரணமாக பண்டைக்கால கருவிகள் தற்போது பயன்பாட்டில் இல்லாத சூழல் நிலவுகிறது. ஆண்டாண்டு  காலமாக உழவனின் உடன் இருந்த உபகரணங்கள் தற்போது காட்சி பொருளாக  மாறியுள்ளன.  அந்த வகையில் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில்  தற்போது வரை தனது முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்திய வேளாண்மை உபகரணங்களை  பொக்கிஷமாக விவசாயி ஒருவர்  பராமரித்து வருகிறார்.




பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த முன்னோடி விவசாயி செண்பகசேகரன்  பிள்ளை. இவர் தனது வீட்டில் முன்னோர்கள் பயன்படுத்திய  விவசாய உபகரணங்களை சேகரித்து பராமரித்து வருகிறார். பண்டை காலங்களில் வீட்டின் செல்வமாக கருதப்பட்ட பொருட்கள் தறுபோது காட்சிபடுத்தும் பொருளாக மாறியுள்ளது. இதனை  உழவர் திருநாள், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற நாட்களில்   பூஜையிட்டு  அதனை பாதுகாக்கிறார். அவரிடம் தற்போது 50 க்கு மேற்பட்ட பொருட்கள் உள்ளன. அதில் நாஞ்சில் என்று அழைக்கப்படும் கலப்பை, நுகம், பரம்பு  மரம், களை, பொழித்தட்டு பலகை, ஊடுமண்வெட்டி, வட்டம் வெட்டும் மரங்கொத்தி,  துறண்டி , கவை,   குதில்  ஏணி, கோடாலி,  பிள்ளைக்கம்பு, குழைதறி கொத்தி,  துலா கூனை,  உரல் உலக்கை,  கல் தொட்டி,  என பல உபகரணங்கள் உள்ளன இந்த பண்டைய கால பொக்கிஷங்கள் குறித்து தற்போதைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வசதியாக ஓவொரு தமிழ் பண்டிகையின் போதும் இதனை அவரது வீட்டில் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் அங்கு வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது தொடர்பாக பல விஷயங்களை கற்றுக்கொடுத்து வருகிறார்.


இது குறித்து அவர் கூறும் போது,  மழை பெய்யாத காலங்களில் கிணறுகளில்  இருந்து தண்ணீர் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டன. அதற்காக  துலாக்கூடை என்னும் பெரிய வாளி  பயன்படுத்தப்பட்டது.  5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் மூலம் தற்போது எடுக்கப்படும் தண்ணீர் முன்காலத்தில் இதன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு  தண்ணீர் இறைத்து  விவசாயம் மேற்கொண்டுள்ளனர்.



பிள்ளை பெற்றெடுத்து சில மாதங்களில் மீண்டும் நெல் நாற்று நடும்  பணிகளில் ஈடுபடும் பெண்கள், வயல் வரப்புகளில்  குழந்தையை தொட்டில் கட்டி தூங்க வைக்க பயன்படுத்திய பிள்ளைக்கம்பு, வயல்களில் கொண்டுவரப்படும் இலைத்தழைகளை சிறிது சிறிதாக வெட்டி உரமாக்க பயன்படுத்திய குழைவெட்டி,  அறுவடை செய்த நெற்கதிர்களை  களத்தில் கொண்டுவந்து நெல்மணிகளை  பிரித்தெடுக்க பயன்படுத்திய உபகரணங்கள், நெல் மணிகளை அளந்து எடுக்கும்  மரைக்கால், உளக்கு, விதவிதமான அரிவாள், வெட்டுக்கத்திகள், என பல பொருட்களையும் பாதுகாத்து வருவதாகவும், தனது முன்னோர்கள் பாதுகாத்து வந்த உபகரணங்கள் இப்போதைய தலைமுறையினருக்கும்  தெரிய வேண்டும் என்பதால் சேகரித்து வைத்து, தற்போது வேளாண்மை துறையில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பதற்கும்  பயன்படுகிறது எனவும்,  இது போன்ற பண்டைக்கால  விவசாய உபகரணங்களை  சேகரித்து அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும், அடுத்த தலைமுறையினருக்கும்  தனது முன்னோர்களின் செயல்திறன் தெரியவைக்க அரசு முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.