உலகில் அதிக மரபுச் சின்னங்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது மரபுச் சின்னங்கள் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து, அவற்றைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை உருவாக்க ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டடக்கலை சிறப்புகள் கொண்டதாக கோயில்கள் திகழ்கின்றன. இதுபோன்ற சிறப்புவாய்ந்த ஒரு கோயில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மேலக்கொடுமலூரில் உள்ள சிவன் கோயில். ஆனால் இது தனது கடந்த காலச் சிறப்பை இழந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதைப் பாதுகாக்க உலக மரபு வாரத்தில் நாம் உறுதி ஏற்போம்.
இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறும்போது,
மேலக்கொடுமலூரில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட குமுலீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கிருந்த சுந்தரபாண்டியன், விஜயநகர மன்னர் இம்மடி அச்சுததேவ மகாராயர் ஆகியோரின் இரு கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை 1907-ல் பதிவு செய்துள்ளது.
கி.பி.11-ம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டுகளில் உத்தமசோழநல்லூர் என குறிக்கப்படும் மேலக்கொடுமலூர், கி.பி.13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியில் உத்தமபாண்டியநல்லூர் என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் அருகிலுள்ள கீழைக்கொடுமலூர் சோழர் ஆட்சியில் மதுராந்தகநல்லூர் எனவும், பாண்டியர் ஆட்சியில் மதுரோதயநல்லூர் எனவும் அழைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் இக்கோயில் இறைவன் உத்தமபாண்டீஸ்வரமுடையார் எனப்படுகிறார். இவ்வூரைச் சேர்ந்த அரையன் யாதவராயன் என்பவர் உச்சிபூசைக்கு அமுது செய்தருள கண்டவிரமிண்டன் என்ற ஒரு சந்தியை நிறுவியுள்ளார். இதற்கு வேண்டும் நிவந்தங்களுக்காக வடதலைச் செம்பிநாட்டு கொற்றூர், கண்ணிப்பேரி, உழையூர் ஆகிய ஊர்களை தேவதான இறையிலியாகக் கொடுத்துள்ளார்.
இவ்வூர்களில் ஏற்கனவே உள்ள தேவதான, பள்ளிச்சந்தம் நீக்கி இங்கு விளைந்த நிலத்துக்கு அந்தராயம் எனும் உள்ளூர் வரியும், விநியோகம் எனும் பொதுச்செலவுக்கான வரியும் விதிக்கப்பட்டு கோயிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வரி நிலத்தையும், அதில் விளைந்த பயிரையும் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவை விளைந்த நிலத்துக்கு ஒன்று முக்காலும், ஐப்பசிக்குறுவை விளைந்த நிலத்துக்கு ஒன்று பாதியும், துலா இறைத்து விளைந்த நிலத்துக்கு ஒன்று காலும், எள், வரகு, தினை விளைந்த ஒரு மா நில அளவுக்கு ஒன்றேகால் திரமம் காசும் வரியாகப் பெற்றிருக்கிறார்கள்.
கி.பி.1534-ல், விஜய நகர மன்னர் இம்மடி அச்சுத தேவ மகாராயர், பாண்டி மண்டலத்து சேதுமூலம் தனுஷ்கோடியில் சேது மாதவப்பெருமாள் திருவாராதனக் கட்டளைக்கும், ராமநாதன் கோயில் திருப்பணிக்கும் வடதலை செம்பில் நாட்டு மேலைக் கொடுமலூரான உத்தமபாண்டியநல்லூரை தானமாக வழங்கியுள்ளார். ஏற்கனவே இவ்வூர் சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊரின் ஒருபகுதியை தேவதானமாகவும் மறுபகுதியை திருவிடையாட்டமாகவும் கொடுத்துள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு கல்வெட்டு ஆகும்.
இவ்வளவு கல்வெட்டு சிறப்பு வாய்ந்த இக்கோயில் தற்போது முழுவதும் சிதிலமடைந்த நிலையில் கருவறை, அர்த்தமண்டபம் மட்டுமே உள்ளதாகக் காட்சியளிக்கிறது. வெளிப்பகுதியில் இருந்த தேவகோட்டங்கள் சிதைந்துள்ளன. பிரஸ்தரத்தின் மேற்பகுதி இல்லை. இக்கோயிலின் சிற்பங்கள் கோயில் முன்பு உள்ள ஒரு கட்டடத்தில் வைத்து வழிபடப்படுகிறது. தொல்லியல் சிறப்பு கொண்ட இக்கோயிலை அரசு பழுது நீக்கி பாதுகாக்கவேண்டும் என்றார்.