தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் தங்கராஜ் (37). இவர் சிவகிரி பஜாரில் அரிசி கடை வைத்து  நடத்தி வருகிறார். இந்த நிலையில் வட நாட்டை சேர்ந்த சுனில்(42), மற்றும் கிஷன் (63) ஆகிய இருவரும் தங்கராஜிடம் கடந்த சில நாட்களாக பழகி வந்துள்ளனர். அதோடு தங்களுக்கு தங்க  தோரணங்கள் கொண்ட புதையல் கிடைத்திருக்கிறது. அது சுமார் 2 கிலோ அளவில் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. நீங்கள் எங்களிடம் நன்றாக பழகியவர் என்பதால் உங்களுக்கு தருகிறோம், அதை வைத்துக்கொண்டு அவசர தேவைக்காக முன் பணமாக ரூ.5 லட்சம் தாருங்கள் என்று கூறியுள்ளனர். அதோடு உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் சேம்பிலாக தருகிறோம் என்று இரண்டு குண்டுமணி அளவில்  தங்க முலாம் பூசி்யதை கொடுத்துள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட தங்கராஜ் முன்பணமாக இருவருக்கும் 2500 ரூபாய் கொடுத்துள்ளார்.


பின் தங்க முலாம் பூசியிருப்பதை அறிந்து சந்தேகமடைந்த தங்கராஜ் இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி இருவரையும் கையும், களவுமாக பிடிக்க முயன்றார், அதன்படி  காவல்துறையினர் தங்கராஜ் உதவியுடன் காத்திருந்து இருவரையும் வரவழைத்து அவர்களை  அமுக்கி பிடித்தனர். அப்போது அவர்களிடம் இருந்த தங்க முலாம் பூசிய போலி தங்கத்தை பறிமுதல் செய்து சிவகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது, அதாவது பிடிபட்ட சுனில் மற்றும் கிஷன் ஆகிய இருவரும் குஜராத் அருகே அகமதாபாத் டக்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், 20 நாட்களுக்கு முன்னர் கடையநல்லூர் பகுதிக்கு குடும்பத்துடன் வந்தவர்கள் அங்கு தங்கியிருந்து இது போன்று பழகி மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. பின் காவல்துறையினர் அவர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவர்கள் சொன்ன குடும்பத்தினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


மேலும் இதே யுக்தியை பயன்படுத்தி கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இலட்சக்கணக்கில் மோசடி செய்து பணத்தை பெற்றுக்கொண்டு தப்பியோடியதும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே யுக்தியை பயன்படுத்தி மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு கைதான சுனிலின் முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது மனைவி லட்சுமிகா என்பவர் கடந்த 2022 இல் 5 பேர் கொலை வழக்கு ஒன்றில் கர்நாடகா சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுனில், கிஷன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த  வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தது தொடர்பாக புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் காவலர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். அதோடு இது போன்று புதையல் இருப்பதாக கூறி வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்களிடம் ஏமாந்தவர்கள் வெக்கப்பட்டு புகார் அளிக்க தயங்குகின்றனர். அதனை சாதகமாக பயன்படுத்தி இது போன்று மோசடி பேர்வழிகள் காவல்துறையினரிடம் சிக்காமல் தொடர்ந்து இதே வேலையை செய்கின்றனர். எனவே இது போன்று சந்தேகப்படும் படியான நபர்களை கண்டறிந்தால் பொதுமக்கள் தைரியமாக உள்ளூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வெளிமாநில ஆசாமிகளிடம் ஏமாற வேண்டாம் என்றும் கூறியதோடு, பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். புதையல் இருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற வட மாநிலத்தவர் இருவர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது