அரசுப் பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என பள்ளியின் தலைமையாசிரியை தெரிவிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

 

அதாவது, கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து காவி துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்படவில்லை.

 

கர்நாடக அரசும் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதற்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

 

அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 



 

இந்த நிலையில்தான் ராமநாதபுரம் அடுத்துள்ள  சாத்தான்குளம் கிராமத்தில் ஹிஜாப் பிரச்சனை வெடித்துள்ளது. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  புதிதாக பள்ளியில் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்று இருக்கிறார். அவரிடம் பள்ளி தலைமை ஆசிரியை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி அவரது தாயிடம் கூறி இருக்கிறார். உடனே மாணவியின் தாய் தலைமை ஆசிரியை சந்தித்து கர்நாடகா சம்பவத்தை சொல்லி விளக்கம் கேட்டு உள்ளார்.

 

அதற்கு அந்த தலைமை ஆசிரிரியர், "தனியார் பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதிப்பார்கள். இது அரசுப் பள்ளி. இந்த பிரச்சனைக்கு பிறகு ஹிஜாப் அணிய சொல்லி எந்த உத்தரவும் வரவே இல்லை. இது நான் கொண்டு வந்த பழக்கம் இல்லை. எனக்கு முன்பே இதுதான் நடைமுறை. என்னால் இதை மாற்ற முடியாது." என்றார்

 



 

"தமிழ்நாடு அரசு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதை நிரூபித்தால் மாணவியை பள்ளிக்குள் அனுமதிப்பீர்களா?" என மாணவியின் தாய் தலைமை ஆசிரியரிடம் கேட்கிறார். அதற்கு அவர், "நான் அட்மிஷன் போடும்போதே இதை சொல்லி யோசிக்க சொன்னேன். அட்மிஷன் போட்ட பிறகு இதை செய்ய முடியாது." என்று சொன்ன வீடியோ இந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட நகலுடன் இணைத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

 

மாணவியின் தாயாரும் பள்ளி தலைமை ஆசிரியையும் பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியிலும்  பள்ளி தலைமை ஆசிரியரிடமும் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.