காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் இப்போது கேரளா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று எர்ணாகுளம் மாவட்டத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். ராகுல் காந்தியின் நடைபயணத்தை வரவேற்கும் விதமாக நெடும்பாசேரி கோட்டாயி ஜங்சனில் 80 அடி நீளத்தில் பிளக்ஸ் போர்டு ஒன்று வைக்கப்பட்டது. அதில் ரவீந்திரநாத் தாகூர், சந்திரசேகர ஆசாத், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட தேச தலைவர்களின் படங்களின் வரிசையில் சாவர்க்கரின் போட்டோவும் இடம்பெற்றிருந்தது. வழக்கமாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்பினர் மட்டுமே சாவர்க்கரை புகழ்ந்து கொண்டாடி வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியினரும் சாவர்க்கரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு போர்டு வைக்கபட்டதாக விவாதம் எழுந்தது.

 



 

 

அதிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ அன்வர் சதாத்தின் வீடு அமைந்துள்ள கோட்டாயி ஜங்சன் பகுதியில் அந்த பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது விவாதத்தை சூடாக்கியது. சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சாவர்க்கர் படத்தின் மீது மகாத்மா காந்தி படத்தை ஒட்டினர். காங்கிரஸ் கட்சியினர் சாவர்க்கர் படத்தை மறைப்பதற்கு மட்டுமே காந்தி போட்டோவை பயன்படுத்தியதாக சி.பி.எம் கட்சியினர் கிண்டலடித்தனர். இதையடுத்து சாவர்க்கர் போட்டோ வைத்ததாக காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி செங்கமனாடு மண்டல தலைவர் சுரேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 



 

இதுபற்றி சுரேஷ் கூறும்போது, "நேற்று முன் தினம் இரவு 10 மணிக்குதான் ஃபிளக்ஸ் போர்டு வைக்கச்சொன்னார்கள். 80 அடி நீளமான ஃபிளக்ஸ் போர்டின் புரூப் சரியாக பார்க்கமுடியவில்லை. நள்ளிரவு ஒரு மணிக்கு பிளக்ஸ் கிடைத்ததும், வைத்துவிட்டோம். அன்வர் சதாத் எம்.எல்.ஏ அழைத்து சொன்னபோதுதான் சாவர்க்கர் போட்டோ இருந்தது எனக்கு தெரியவந்தது. ஒரு நிமிட கவனமின்மை யாத்திரையை விவாதமாக்கிவிட்டது. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நான் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக கட்சி என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்" என்றார்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.