கன்னியாகுமரி மாவட்டம் இறைச்சகுளம் பகுதியில் சாலை அமைக்கும் பணி தரமற்று இருப்பதாக கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை திமுக நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



 

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சாலை சீரமைப்பு மற்றும் தார் ரோடு போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நாகர்கோவில் இறைச்சகுளம் பகுதியில் சாலை பணிகள் போடுவதற்கான ஒப்பந்தத்தை எடுத்தவர் குமரி கிழக்கு மாவட்ட திமுக கட்சியினுடைய பொருளாளர் கேட்சன் நேற்று இறைச்சகுளம் பகுதியில் தார் சாலை போடும் பணியில் நடைபெற்று வரும் போது அரசின் விதிமுறைககளை மீறி தரம் குறைந்த அளவில் சாலைகள் போடப்பட்டு வந்ததாக சம்பவ இடத்தில் பணியில் இருந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று நாம் தமிழர் கட்சியினர் கேள்வி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கேட்சன் மற்றும் திமுக நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியினர் தாக்கியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் கண்முன்னையே திமுகவினர் நாம் தமிழர் கட்சியினை தாக்கியது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் நேற்றைய தினம் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினர் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் மக்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 



 

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் ரூபன் கூறுகையில், ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் வகையில் தரம் இல்லாமல் நடைபெற்ற சாலை பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகளுடன் தான் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அவர்கள் அதற்குரிய பதிலை கூறியிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. திடீரென சம்பவ இடத்திற்கு வந்த திமுக நிர்வாகிகள் ஏன் என்ன எனக் கூட கேட்காமல் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது அனைத்தும் போலீசார் முன்னிலையில் நடைபெற்று உள்ளது. போலீசார் எங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் அளிக்கவில்லை. அதேவேளையில் எங்களை தாக்கி விட்டு நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் சம்பவ இடத்திலேயே திமுக நிர்வாகிகளிடமிருந்து புகாரை பெற்றுக் கொண்டு எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறார்கள். நாங்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பார்க்க வந்துள்ளோம். இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.