எகிறிய பெட்ரோல் டீசல் விலை! பாதிக்கும் மீன்பிடி தொழில்! மானிய டீசலை அதிகரிக்க மீனவர்கள்  வலியுறுத்தல்!


டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழில் பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மானிய டீசலை அதிகரிக்க வேண்டும் என மீனவர்கள்  கோரிக்கை விடுத்து உள்ளனர்.நாடு முழுவதும் தினமும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விலை  உயர்வு குறித்து மீனவர்கள் தரப்பில்  கூறுகையில்,  விசைப்படகு ஒன்றுக்கு அரசால் மாதம் ஒன்றுக்கு 1,800 லிட்டர் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகின்றது. ஒருமுறை கடலுக்கு சென்று வர ஒரு படகிற்கு மட்டும் 900 லிட்டர் தேவைப்படுகின்றது. ஒரு மாதத்தில் மட்டும் 12 நாட்கள் கடலுக்கு சென்று வருகிறோம். 1 மாதத்தில் மட்டும் ஒரு படகிற்கு சுமார் 10 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஆனால் அரசால் ஒரு படகுக்கு மாதம் ஒன்றுக்கு 1,800 லிட்டர் மட்டும்தான் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 8 ஆயிரம் லிட்டர் டீசலை அதிகமான விலையில்தான் வாங்குகிறோம். 




 


மானிய டீசலை அதிகரிக்க வலியுறுத்தல்


கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு 76 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு லிட்டர் மானிய டீசல் தற்போது 79 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வால் மீன்பிடித் தொழில் முழுமையாக பாதிக்கும் அபாய நிலை  ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய டீசலின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் அல்லது டீசலின் விலையை அதிகமாக குறைக்க வேண்டும்.



 


மேலும் பைக் வைத்திருப்போர் கூறுகையில், பெட்ரோல், டீசல் இதுவரை இல்லாத அளவுக்கு 100-ஐ தாண்டி உள்ளது. கியாஸ் சிலிண்டர் விலையும் அதே நிலைமைதான். இனி மக்கள் இருசக்கர வாகனங்களுக்கு பதிலாக மீண்டும் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிகளில் தான் பயணம் செய்ய வேண்டிய நிலைமை வந்துவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது. எனவே பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விைலயை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அன்றாட உணவுப் பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் விலை அதிகரிக்கும். இதனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் கூடுதல் செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். விலையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.



தற்போது அனைத்து வீடுகளிலும் இருசக்கர வாகனம் இல்லாத ஒரு நிலை வந்துவிட்டது. எப்படி வீட்டிற்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தினமும் தேவைப்படுவது போல் பெட்ரோலும் தினமும் தேவைப்படும் ஒரு அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது என்பது தான் உண்மை. நமது நாட்டை விட பல சிறிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகத்தான் உள்ளது. இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு அனுப்பப்படும் பெட்ரோல், டீசல் அந்த நாடுகளில் விலை குறைவாகவே உள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் தான் மற்ற நாடுகளைவிட பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாகவே உள்ளது. இதனால் முழுமையாக பாதிக்கப்படுவது அனைத்து தரப்பு மக்களும்தான்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருக்கும் பலர் அந்த கார்களை பழைய விலைக்கே விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு மக்களின் அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு தரப்பினரும்  தெரிவிக்கின்றனர்.