நெல்லை : உலக திருநங்கைகளின் சமூக பாதுகாப்பைக் கருதி அவர்களின்  சிறப்பை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி திருநங்கை தின நாளாக  உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது, அதன்படி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 28 திருநங்கைகளுக்கு பெயர் மாற்றம் செய்து அரசு இதழில் வெளியிடுதல், 33 திருநங்கைகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல், 9 திருநங்கைகளுக்கு ரூ.2.82 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவி என மொத்தமாக 70 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது, கடந்த 2020 - 21 ஆம் நிதியாண்டில் 12 திருநங்கைகளுக்கு ரூ 25  ஆயிரம் வீதம் சுய தொழில் துவங்குவதற்கான மானியம் வழங்கப்பட்டு உள்ளது,




இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்திகளுக்கு அளித்த பேட்டியில்,  திருநங்கைகளுக்கு நீண்ட கால திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான   முயற்சிகள் எடுக்க வேண்டும் என திட்டமிட்டு உலக திருநங்கையர்  தினத்தில் அவர்களுக்கான பரிசாக 4 வகையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது மக்கள் குறைதீர் கூட்டம் மீனவர்கள் குறைதீர் கூட்டம்,  ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் போல நெல்லை மாவட்டத்தில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு மே மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்,  அந்தக் கூட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று திருநங்கைகளுக்கான கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 




மேலும் படித்த திருநங்கைகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் போட்டி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி மையம் மே மாதம் முதல் தொடங்கி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பல்வேறு  பயிற்சிகள் வழங்கப்படும்,  உயர்கல்வி படிக்கும் திருநங்கைகளை  ஊக்குவிக்கும் பொருட்டு அவர்கள் உயர் கல்வி கற்க விரும்பினால்  கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தெரிவித்தார். இந்த திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்தவுடன் திருநங்கைகள் அனைவரும் கைதட்டி கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண