பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பு மக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர், இந்த நிலையில் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இதற்கு கண்டனம் தெரிவித்தும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர், எனினும் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது, அதன் ஒரு பகுதியாக,
நெல்லை மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் நூதன போராட்டம் நடைபெற்றது. இருசக்கர வாகனம், பெட்ரோல் டீசல் வாங்கும் கேன்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கு மாலை அணிவித்து மணியடித்து ஒப்பாரி வைத்து விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் டியூக் துரைராஜ், கண்ணன், ராஜேஷ்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்,
தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கூறும் பொழுது, விலை உயர்வை கண்டித்து மிகப் பெரிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது, மோடி அரசு இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மிகப்பெரிய போராட்டங்களை காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுக்கும், 4 ஆம் தேதி வரை தொடர் போராட்டங்களை காங்கிரஸ் பேரியக்கம் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடத்த இருக்கிறது என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்