வறட்சி மாவட்டம், தண்ணியில்லா காடு, காஞ்சி போன பூமி என்றெல்லாம் ராமநாதபுரம் மாவட்டத்தை பற்றி சொல்லும்போது இந்த வார்த்தைகளின் அடைமொழி பயன்படுத்த யாரும் தவறுவதில்லை. ஆனால், இந்த வறண்டுபோன பூமியில் ராமேஸ்வரம், திரு உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி ஏர்வாடி போன்ற புண்ணிய தலங்கள் இருப்பது ஒரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று தற்போது இந்த மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் ஒவ்வொன்றாக உருவாக்கப்பட்டு வருகிறது.  மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் உள்ள குட்டிக் குட்டித் தீவுகளை வனத்துறையினர் சுற்றுலாத் தலங்களாக மாற்றி பொது மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ராமேஸ்வரம் அருகே உள்ள குருசடை தீவு சுற்றுலா தளமாக மாற்றப்பட்டு அங்கு கடலுக்குள் சென்று  சுற்றிப் பார்க்கும் வகையில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. அது குறித்து நாம் காணலாம்.




ராமேஸ்வரம் பகுதியில் 4 ஆண்டுக்கு பின் பாம்பனில் இருந்து குருசடை தீவிற்கு வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரியை துவக்கியுள்ளனர். பாம்பன் தெற்கில் உள்ள மன்னார் வளைகுடா தீவான குருசடை தீவைச் சுற்றி பவள பாறைகள், கடல் அட்டைகள் உள்ளிட்ட பல அரிய கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கிறது. இங்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்தது. 2018ல் குருசடை தீவுக்கு சுற்றுலா படகு சவாரி துவக்கிட வனத்துறை முயற்சித்தது, மீனவர்கள் எதிர்ப்பால் தோல்வி அடைந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சுற்றுலா படகுகள், மரப்பாலம் சேதமடைந்தது. இந்நிலையில் 4 ஆண்டுக்கு பின் நேற்று பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவுக்கு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா படகு சவாரியை மண்டபம் வன அலுவலர் வெங்கடேசன் துவக்கி வைத்து, பயணிகளுடன் சவாரி செய்தார்.ஒரு நபருக்கு கட்டணம் ரூ.400ம், காலை 7:00 முதல் மதியம் 2:00 மணி வரை படகு சவாரி செய்யலாம். கடலில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப பயண நேரம் மாறலாம். ஒரு மணிநேர பயணத்தில் குருசடை தீவுக்குள் இறங்கி பயணிகள் சுற்றி பார்த்து மீண்டும் குந்துகாலில் வந்திறங்கலாம். குந்துகாலில் உள்ள வனத்துறை மையத்தில் பயண டிக்கெட் பெறலாம். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.




ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றி கடல் பசு, ஆமை, டால்பின், கடல் குதிரை, பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட 3600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு கடல் பகுதியை சுற்றிலும் டால்பின் மற்றும் கடல் பசு, பவளப்பாறைகள் உள்ளிட்ட உயிரினங்களும் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது. அதுபோல் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவு வரையிலும் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்க வனத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டு கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் இருந்து 3 பைபர் படகுகள் வாங்கிக் கொண்டு வரப்பட்டு பாம்பன் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பலத்த சூறாவளி காற்றில் இரண்டு படகுகள் லேசான சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் இந்த திட்டத்திற்கு மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் குருசடை தீவு வரையிலான சுற்றுலா படகு போக்குவரத்து திட்டமும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.




இந்த நிலையில் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவு வரையிலும் வனத்துறை சார்பில் சுற்றுலா படகு போக்குவரத்து திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது. குருசடை தீவு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் படகு போக்குவரத்து நேற்று முதல் தொடங்கப்பட்டது. மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குந்துகால், சின்னப் பாலம் கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.




இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது ஒரு பைபர் படகு மட்டுமே இந்த சுற்றுலா படகு போக்குவரத்துக்கு பயன் படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு படகில் 12 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம். ஒரு நபருக்கு ரூ,400 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு படகுகளின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முடிந்த பின்னர் அந்த இரண்டு படகுகளும் இந்த சுற்றுலா படகு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். குந்துகால் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள கடல் பகுதியில் படகில் பயணம் செய்து குருசடை தீவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். குருசடை தீவு ஒட்டிய கடற்கரை பகுதியில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகள் உள்ளிட்டவைகளை பார்த்த பின்னர் மீண்டும் படகில் ஏற்றிக்கொண்டு குந்துகால் பகுதிக்கு அழைத்து வரப்படுவார்கள். தினமும் காலை 7 மணியில் இருந்து பகல் 2 மணி வரையிலும் படகு போக்குவரத்து நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார். தற்போது படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர், என தெரிவித்தனர்.