நெல்லை மாவட்டத்தில் 5வது புத்தக கண்காட்சி ”பொருநை நெல்லை புத்தக திருவிழா” என்ற பெயரில் வருகின்ற 17 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது, பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது,. குறிப்பாக நெல்லை பொருநை நாகரீகம் தொடர்பாகவும், நெல்லை காணி பழங்குடி மக்கள் வாழ்வியல் தொடர்பான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. 10 நாட்கள் நடெபெற உள்ள இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் விஐபிக்கள் அழைத்து வரப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் தீவிர ஏற்பாடு செய்து வருகிறது, இந்த சூழலில் புத்தக திருவிழாவுக்கான அழைப்பிதழை சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் இன்று வெளியிட அதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பெற்று கொண்டார், தொடர்ந்து புத்தக திருவிழா தொடர்பாக கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் நூலகத்துடன் கூடிய விழிப்புணர்வு வாகனத்தையும் ஆட்சியர் விஷ்ணு கொடி அசைத்து துவங்கி வைத்தார், அதை தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது,
5 ஆவது பொருநை நெல்லை புத்தக திருவிழாவில் முக்கிய அம்சமாக பொருநை நாகரீகத்தன் 3டி கட் அவுட் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர பல்வேறு நிகழ்வுகள் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக இளைஞர்கள் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது, நாட்டுப்புற கலைஞர்களின் பல்வேறு நிகழ்வுகள், புகைப்பட போட்டி, என மக்கள் கொண்டாட்டமாக பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு உள்ளது, கிராம மக்கள் கண்காட்சிக்கு அதிகளவில் வர வேண்டும் என்பதால் அரசு பள்ளிகள் மூலம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார்,
மேலும் கண்காட்சியில் இதுவரை மொத்தம் 150 ஸ்டால்கள் அமைக்க இதுவரை திட்டமிட்டுள்ளோம், இதில் காணி மக்களுக்கு தனி ஸ்டால், இயற்கை விவசாயம் தொடர்பாக தனி ஸ்டால், அரசு துறை சார்ந்த ஸ்டால் போன்றவையெல்லாம் அமைக்கப்படவுள்ளது, பள்ளி மாணவர்களை சுழற்சி முறையில் அழைத்து வர முதன்மை கல்வி அலுவலர் மூலம் திட்டமிட்டுள்ளோம் என்றார், தொடர்ந்து நெல்லையில் காணி பழங்குடி மக்களுக்கு வனப்பகுதியில் அவர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியபோது, காணி மக்களை பொறுத்தவரை வன உரிமை பாதுகாப்புச் சட்டம் 2006ன் கீழ் பட்டா கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் விரைவில் நல்ல முடிவு வரும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம், அடிப்படை தேவை குறித்த கோரிக்கையான மின்தேவையை பூர்த்தி செய்ய சோலார் அமைத்து கொடுத்துள்ளோம் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்..