தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் பொங்கல் திருநாள் முக்கியமானதாகும். பொங்கலையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்து திருஷ்டி கழிப்பது வாடிக்கை. திருஷ்டி கழிக்க எலுமிச்சை மற்றும் வெள்ளை பூசணிக்காய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் பொங்கலையொட்டி அதிகளவில் பூசணி வாங்குவததால் விற்பனை அதிகளவில் நடக்கும். இதனால், பொங்கல் பண்டிகை விற்பனையை குறி வைத்து மாவட்டத்தில் முதுகுளத்தூர் பகுதியில் பயிரிடப்பட்ட வெள்ளைபூசணி விளைச்சல் அமோகமாக இருப்பதால் பூசணி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


'பொங்கலுடன் பூசணிக்கு உள்ள தொடர்பு'


பூசணி கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அதிகமாகப் படர்ந்து மிகுதியாக பூக்கும். இது கொடியாகத் தரையில் படரும், கூரை வீடுகள் மீது ஏறிப் படர்வதும் அதிகமாக இருக்கும். கொடியின் தண்டுகள் குழல் போன்றவை இலைகள் அகலமாக இருக்கும். காய்கள் பெரிய அளவிலானவை. பூசணிப்பூ பொன் மஞ்சள் நிறமானது. இந்திரனுக்குப் பிரியமானது. மழை மேகங்களுக்கு இடையே தோன்றும் இடியின் தேவதைகளே பூமியில் பூசணிக் கொடியாகவும் மலராகவும் தோன்றுகின்றன என்று நம்புகின்றனர். மார்கழி மாதம் முழுவதும் வீட்டுவாசலில் (வழக்கத்தை விட) பெரிய பெரிய கோலங்களை இட்டு அதை வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்வர். அதன் நடுவில் சாண உருண்டைகளைப் பிடித்து வைத்து அதன் மீது பூசணிப் பூக்களைப் பொருத்தி வைக்கின்றனர்.




சாண உருண்டை மீது பூசணிப் பூக்களை வைப்பதற்குப் பலவிதமான வரலாறுகள் சொல்லப்படுகின்றன. சாணமும் அது மெழுகிய இடமும் லட்சுமியின் வாசஸ்தலமாகும். லட்சுமியை வரவேற்கும் வகையில் வீட்டு முற்றத்தைச் சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு இந்திரனுடன் அவளை வரவேற்கவே இந்திர மேக புஷ்பமான பூசணிப் பூக்களை வைக்கிறோம் என்கின்றனர். இடிகள் சாணக் குவியல்கள் மீது விருப்பமுடன் பாய்ந்திருக்கும் என்பதால் இடியின் மலர்களான பூசணிப் பூக்களைச் சாண உருண்டையின் மீது பொருத்தி வைக்கின்றனர் என்பர். இவ்வழக்கத்தைப்  பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.


இந்தச் சாண உருண்டைகளை முற்பகலுக்கு மேல் எடுத்துச் சுவரில் பூவுடன் சேர்த்து வரட்டியாகத் தட்டுவர். அது காய்ந்ததும் எடுத்துச் சேகரித்து வைத்து தைப்பொங்கல் நாளில் மூட்டும் அடுப்புத்தீக்கு எரிபொருளாகப் பயன் படுத்துகின்றனர். பொங்கலின் போது பெரிய சல்லடையில் பூசணி இலைகளில் பொங்கலை வைத்துப் படைப்பதே பெரு வழக்கமாகும். இந்திரன் ஆயிரம் கண்களை உடையவன். சல்லடைக்கும் ஆயிரம் கண்கள் இதனால் சல்லடையை இந்திரனின் வடிவமென்று கருதுகின்றனர்.




சல்லடையில் பூசணி இலைகளை வைத்து அதில் பொங்கலை இட்டுத் தெய்வங்களுக்குப் படைக்கின்றனர். போகியும் பொங்கலும் இந்திரனோடு தொடர்புடையவையாகும். பூசணியில் பலவகை உள்ளன. நாட்டுப் பூசணி, கல்யாண பூசணி ஆகியவை முக்கியமானவை. கல்யாண பூசணிக் காயை இந்திரனின் யானையான ஐராவதத்திற்கு ஒப்புமையாகக் கூறுவர். அதைத் தெய்வங்களுக்குப் பலியாக அளிக்கின்றனர். அதனால் அதைத் தேவையின்றி வெட்டிக் கூறுபோடக் கூடாது. கல்யாண பூசணி திருஷ்டி தோஷங்களைப் போக்குவது அதனால் அதைத் திருஷ்டி நீங்க வீட்டின் வாயிலில் கட்டித் தொங்கவிடுகின்றனர். அது தீய சக்திகளை அமானுஷ்ய தீமை செய்யும் எண்ணக் கதிர்களை இழுத்து அழிப்பதாக கருதப்படுகிறது.


'பூசணி சாகுபடி'


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்  அருகேயுள்ள காக்கூர், கருமல், மட்டியரேந்தல், தாழியரேந்தல் போன்ற சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பொங்கலையொட்டி  வெள்ளை பூசணியை நடவு செய்துள்ளனர். குறைவான தண்ணீரைக் கொண்டு மானாவாரி நிலங்களில் விதை நடவு செய்யப்பட்டது. தென்மேற்கு பருவமழை தொடக்க காலகட்டத்தில் போதிய மழை பொழிவு கிடைக்கவில்லை. இது இப்பயிருக்கு சாதகமான சூழலை உருவாக்கியது. குறைந்த தண்ணீரை கொண்டு செழித்து வளர்ந்த வெள்ளை பூசணி, அதிகளவில் காய்க்கத்துவங்கியது. காய்கள் பெருக்கமடையும் காலத்தில் மழை பெய்யக் கூடாது. கடந்த சில நாட்களாக பரவலாக பரவலாக மழை பெய்ததால், காய்களுக்கு பாதிப்பின்றி விவசாயிகள் எதிர்பார்த்தது போல் பெருத்து வளர்ந்தது. வெள்ளை பூசணி அதிக மருத்துவ குணம் கொண்டது. உணவில் சேர்த்துக் கொண்டால் சுவையுடன் உடல்நலத்தையும் பாதுகாக்க முடியும். இருந்தாலும் சிறு வியாபாரிகள் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை வெள்ளை பூசணியை திருஷ்டி கழிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். 




மேலும், தைப்பொங்கலுக்கு இயற்கைக்கும் இறைவனுக்கும் படைக்கப்படும் உணவு பொருட்களில் பூசணிக்காயும் ஒன்று. இதன் தேவையை கருத்தில் கொண்ட விவசாயிகள், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பெருத்து வளர்ந்த பூசணிக்காய்களை அறுவடை செய்ய தொடங்கி  உள்ளனர். தற்போது போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளின்  நிலங்களில் வெள்ளை பூசணிக்காய் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 




தீபாவளி, வருடப்பிறப்பு  உள்ளிட்ட  பண்டிகை காலங்களில் எல்லாம் அசைவ உணவுகள்தான் பெரும்பாலான வீடுகளில் சமைக்கப்படும். ஆனால் தைப்பொங்கல் என்றாலே பூசணி, வள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்கு உட்பட பல விதமான காய்கறிகளை வைத்து சமைத்து, இறைவனை வணங்கி அன்று தொடங்கி காணும் பொங்கல் வரை சைவ உணவையே அனைத்து தரப்பினரும் விரும்பி உண்பார்கள், எனவே பொங்கல் அன்று பூசணிக்காயும் பூசணி  பூவும் பெருமளவில் விற்பனையாகி நல்ல லாபத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.