ராமநாதபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனின் நண்பர்கள் வைத்த பேனர் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.


திருமணம் உள்ளிட்ட வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் பேனர் அடிக்கும் கலாசாரம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக வழக்கதில் உள்ளது. சிலர் அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படங்களை, அவர்களுக்கு பிடித்த கடவுள் படங்களை, ஏன் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வைத்தும் பேனர் அடிப்பார்கள்.


கடந்த சில ஆண்டுகளாக பேனரில் எழுதப்படும் வசனம் பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என வித்தியாச வித்தியாசமான வசனங்களை எல்லாம் போடுவார்கள். அதிலும் கட் அவுட்டுகளில் மணமக்களின் நண்பர்களின் மனக்கோட்டைகளில் மலர்ந்த வசனங்களுக்கு எல்லையே இல்லை என கூறலாம். அந்த வகையில் ராமநாதபுரத்தை சேர்ந்த மணமக்கள் நவீன்ராஜ், லாவண்யா திருமணம் அரண்மனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.‌


நிகழ்ச்சியில் மண்டபத்திற்கு வெளியே மணமகனின் நண்பர்கள் வைத்திருந்த பேனர் சமூகவலைதளங்களில் வைரலாகி நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேனரில் மணமக்கள் புகைப்படத்திற்கு கீழ் ஜாதக வடிவில் மணமகனின் நண்பர்கள் தங்கள் புகைப்படம், பெயர், ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு "கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளைங்க நாங்க" என்ற வசனத்துடன் பேனர் வைத்துள்ளனர்.


இந்த பேனரை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஒரு நிமிடம் நின்று பேனரை பார்த்து புன்னகைத்து சென்றனர். அதே நேரத்தில் 80 மற்றும் 90களில் பிறந்து இன்று வரை திருமணம் ஆகாமல் உள்ள அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த பேனரில் என்னோட போட்டோவையும் சேர்த்து போட்டிருக்கலாம் என உச் கொட்டியபடி பார்த்து கடந்து சென்றது பார்ப்பதற்கு பரிதாபமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது.


இதுகுறித்து பேனர் வைத்த மணமகனின் நண்பர்கள் கூறுகையில், 'இது சும்மா விளையாட்டுக்கு வைக்கல உண்மையிலே எங்களோட ஆதங்கத்தைதான் பேனரா வச்சிருக்கோம். ஒருவேளை கல்யாணத்துக்கு வர்றவங்க இந்த பேனரை பார்த்தாவது, எங்களுக்கு பொண்ணு குடுப்பாங்க அப்படிங்கிற நம்பிக்கை இருக்கு. இத பாத்து எங்களுள் ஒருத்தருக்கு கல்யாணம் ஆச்சுன்னா, அந்த கல்யாணத்துலயும், கல்யாணம் ஆகாம இருக்க எங்க பிரண்ட்ஸ் எல்லார் போட்டோவையும் அச்சடிச்சு பேனர் வைக்கலாம்னு முடிவுல இருக்கோம். 'எங்க வீட்ல உள்ள பெத்தவங்களும் எங்களுக்கு பொண்ணு தேடி களைச்சுப் போயிட்டாங்க. எவ்வளவுதான் அலைவாங்க. பாவம் அவங்கள குறை சொல்லி என்ன பிரயோஜனம். பொண்ணு குடுக்குறவங்க பையன் அவ்வளவு சம்பாதிக்கணும், சொந்தமா வீடு, கார் எல்லாம் இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க. ஒரு சில பேர் தான் நல்ல பையனா இருந்தா போதும்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு அப்படிப்பட்ட பையன்கள் இருக்கோம்ன்னு காட்டுறதுக்காக தான் இந்த பேனர் வச்சிருக்கோம். நண்பனையும் வாழ்த்தியாச்சி, எங்களுக்கு பொண்ணும் கேட்ட மாதிரி ஆயிருச்சி, எங்களில் கடைசி நண்பனுக்குத் திருமணம் ஆகுற வரைக்கும் நாங்கள் பேனர் வைப்பதை நிறுத்தப் போவதில்லை என கோரஸாக சிரித்தபடி கூறினர்.


நண்பர்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு வகையில் வரவேற்பு பேனர் அடித்து வைத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தும் நிலையில், நண்பருக்கு வாழ்த்து சொன்ன மாதிரியும் தங்களுக்கு பெண் கேட்ட மாதிரியும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ள இந்த இளைஞர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.