தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள ஞானியார் குடியிருப்பை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுக பாண்டி, இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு அமுதா உட்பட 6 மகள்கள் நான்கு மகன்கள் என 10 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் இரண்டு மகன்கள் இறந்துவிட்டனர்.




அமுதா மற்றும் அவர்கள் தங்கைக்கு திருமணம் ஆகவில்லை. மற்றவர்கள் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். ஆறுமுக பாண்டி மகள் அமுதாவின் ஒன்றே கால் பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரத்தில் தியாகு என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தந்தைக்கு உதவியாக அமுதா தோட்டத்தில் தங்கியிருந்து பணிகளில் ஈடுபட்டு வந்தார்.




வங்கியில் அடமானம் வைத்த நகையை மீட்டு தருமாறு தந்தையிடம் அடிக்கடி அமுதா கேட்டு வந்துள்ளார். ஆனால், கடந்த 5 மாதமாக ஆறுமுக பாண்டி நகையை மீட்க முயற்சி எடுக்காமல் தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தந்தையும் மகளும் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடகு நகை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஆத்திரமடைந்த அமுதா தந்தையின் இருசக்கர வாகன சாவியை எடுத்துக்கொண்டு நகையை திருப்பி தந்து விட்டு சாவியை வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார், ஆனால், மகளின் வார்த்தையை விளையாட்டாக கருதிய ஆறுமுக பாண்டி மகளுக்கு தெரியாமல் இருசக்கர வாகன  சாவியை எடுத்து சென்று விட்டார்.




பின்னர் தோட்டத்துக்கு திரும்பிய ஆறுமுக பாண்டியிடம் நகை தொடர்பாக மீண்டும் அமுதா வாக்குவாதம் செய்துள்ளார். இதில், ஆவேசத்தில் அமுதா தந்தை என்றும் பாராமல் அரிவாளால் ஆறுமுகபாண்டியை சரமாரியாக வெட்டியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஆறுமுக பாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுக பாண்டி மனைவி வாசுகி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அமுதாவை கைது செய்தார்.




பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லை கொக்கரகுளம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.  அடகு நகை பிரச்சனையில் தந்தையை மகளே வெட்டிக்கொண்ட சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண