மத்திய அரசின் விரோத கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல, குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம்  மேற்கொள்ளுவதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

ராகுல் காந்தி பாதயாத்திரை:

 

மத்திய பாஜக அரசின் தவறான அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் விலைவாசி ஏற்றம், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றை விளக்கி கூறும் விதமாகவும் நாடு முழுவதும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இந்த மாபெரும் பாத யாத்திரையை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்க திட்டமிட்டு உள்ளார். 

 

அடுத்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை புறப்படுகிறார். சுசீந்திரத்தில் இருந்து களியக்காவிளைக்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூரம். எனவே 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதையடுத்து களியக்காவிளையில் இருந்து கேரள மாநிலத்திற்கு பாத யாத்திரை செல்கிறார். பின்னர் அவரது தொகுதியான வயநாட்டிலும் பாத யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் 3,500 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 

முன்னேற்பாடுகள்:

 

ராகுல் காந்தி பாதயாத்திரை முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த யாத்திரையை வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வெற்றி யாத்திரையாக நடத்துவதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. 

 

கன்னியாகுமரியில் துவக்க விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களை எம்.பி.க்கள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பாத யாத்திரைக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

இது தொடர்பாக விஜய் வசந்த் கூறியிருப்பதாவது, இந்தியாவின் இழந்த பெருமையை மீட்க தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவிருக்கும் இந்திய இணைப்பு யாத்திரையின் துவக்க விழா நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலுடன், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைகளை ஏற்று கன்னியாகுமரி மாவட்ட கமிட்டிகள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கு பெறவிருக்கும் இந்த யாத்திரையில் உங்கள் அனைவரது ஆதரவையும் அன்பையும் எதிர்பார்க்கிறோம் என எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.