ராகுல்காந்தி வருகையும், பிரச்சாரமும்:


தமிழக பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே  உள்ள நிலையில் அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.  மாநிலம் தாண்டி தேசிய கட்சி தலைவர்களும் தென்மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு நெல்லையில் பிரதமர் மோடி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அதன்படி இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். குறிப்பாக பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையில் திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி, தென்காசி வேட்பாளர் ராணிஸ்ரீகுமார், மதுரை வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் வேட்பாளர் மாணிக் தாகூர், சிவகங்கை வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர்  தங்கபாலு உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


இந்த நிலையில் இன்று  நெல்லை வரும் ராகுல்காந்தி மாலை 3.50க்கு ஹெலிகாப்டரில் பெல் மைதானம் அருகே உள்ள விமான தளத்தில் வந்து இறங்குகிறார். தொடர்ந்து அங்கிருந்து பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிராக 500 மீ தொலைவில் இருக்கும் பெல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தருகிறார். அங்கு 4 மணிக்கு முதல் 5 மணி வரை  நடைபெறும்  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பிரச்சார உரை நிகழ்த்துகிறார்.


போக்குவரத்து மாற்றம்:


*தென்காசி, சங்கரன்கோவில், இராஜபாளையம் மற்றும் நெல்லை டவுண் வழியாக வரும் வாகனங்கள் பாளையங்கோட்டை மார்க்கெட் வழியாக சீவலப்பேரி ரோடு - ஜேஆர் மஹால்-சாந்தி நகர் சென்று திம்மராஜபுரம் பெருமாள் கோவில் மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும்.


கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக வரும் வாகனங்கள் சாந்தி நகர், ரஹ்மத் நகர் சாலையில் ஹமாஸ் லைட் வழியாக திம்மராஜபுரம் செல்லும்.


அதே போல தாழையூத்து, சங்கர் நகர் வழியாக வரும் வாகனங்கள் மாவட்ட நீதிமன்றம் வழியாக திம்மராஜபுரம் பெருமாள்கோவில் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நெல்லையில் டிரோன்கள் பறக்க தடை


காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி நெல்லையில் இன்று பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் நெல்லை மாநகர் முழுவதும்  11ஆம் தேதி நேற்று காலை 6 மணி முதல் 13 ஆம் தேதி நாளை காலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு ராகுல் காந்தி பொதுக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் தண்ணீர் வாட்டர் பாட்டில் மற்றும் பைகள் எடுத்து வரக்கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல இன்றைய நிகழ்ச்சியில் ராகுல்காந்தி ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்  நேற்றைய பேட்டியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். ஆனால் இது குறித்து நெல்லை மாநகர ஆணையர் மூர்த்தியிடம் கேட்டபோது அதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார். எனவே ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிகிறது.