விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் மனிதர்கள் 


மனிதன் தன் இருப்பிடத்தை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே செல்வது மட்டுமின்றி, அதற்காக இயற்கை வளங்கலான காடுகள்,  மலைகள், ஏரிகள் என இயற்கை வளங்களை அழித்து தனக்கான கட்டமைப்பை அதிகரித்து கொள்கிறான். இதனால் இயற்கைக்கு மாறான பேரிடர்கள் நிகழ்ந்தாலும் அவற்றை சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  மேலும் இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இந்த உலகம் பொதுவானது என்பதை மறந்து, நீர் நிலைகளை மாசுபடுத்தி அங்குள்ள உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும், காடுகள் போன்ற வனப்பகுதிகளை அழித்து அங்கு வாழும் உயிரினங்களுக்கு இடமின்றி அவற்றுக்கு இடையோர் அளிப்பதும் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. 


தமிழ்நாட்டில் குறைந்து வரும் காடுகள்.


தமிழ்நாட்டில் முன்பு 3,650 சதுர கி.மீ இருந்த காடுகள், தற்போது 3,593 சதுர கி.மீட்டராகக் குறைந்துள்ளன.  2017-ஆம் ஆண்டு இருந்ததோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு தற்போது 79 ஹெக்டேர் கானகப் பரப்பை இழந்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் காடுகளாகப் பதிவு செய்யப்பட்ட கணக்குப்படி, முன்பிருந்ததைவிட இந்த ஆண்டில் 406 சதுர கி.மீ அளவிலான மரங்களை இழந்துள்ளது. இதன் பிரதிபலனாக காடுகளில் வசிக்கும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பது என்பது நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது குறித்து ஒரு நாளும், சிந்தனை கொள்ளாத மனிதன், பின்னாளில் விலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்வதாக பணியினை விலங்குகள் மீது சுமத்துகிறான். முன்பெல்லாம் அதிகமாக காடுகளில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்ததாக செய்திகள் வெளிவரும்.  ஆனால் தற்போது சிறுத்தை, புலி, கரடி, முதலை போன்ற கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விலங்குகள் ஊருக்குள் புகுந்து நடமாடுவது மட்டுமின்றி மனிதர்களை தாக்கும் நிகழ்வுகளும் நடந்தேற தொடங்கியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டான சம்பவங்கள் தான் தற்போது மயிலாடுதுறை நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்துள்ளது.


சிறுத்தைக்கு சிறிதும் தொடர்பு இல்லாத மயிலாடுதுறையில் சிறுத்தை...!


காடுகளும், மலைகளும் இல்லாத விவசாய நிலங்கள் நிறைந்த சமதள பரப்பைக் கொண்டது மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம். இங்கு காட்டு விலங்குகளோ மனிதர்களை தாக்கக்கூடிய மூர்க்க குணம் கொண்ட விலங்குகள் என்பது அரிது. இவ்வாறான சூழலில் தான் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி இரவு மயிலாடுதுறை நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று தென்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட மாவட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர், சிறுத்தையை பிடிப்பதற்கு கடந்த 10 நாட்களாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதிலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பது அவர்களுக்கு குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. இதனால் 10 நாட்களைக் கடந்தும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறி வருவது மட்டுமின்றி, சிறுத்தை மயிலாடுதுறையை விட்டு திருவாரூர், தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று அங்கேயும் வனத்துறையினர் தங்கள் தேடுதல் பணியை தொடர்கின்றனர்.




நெல்லையில் கரடி


கடந்த 10 நாட்களாக தமிழக மக்களே மயிலாடுதுறை பக்கம் திரும்ப செய்த சிறுத்தை ஒரு பக்கம் என்றால், தற்போது நெல்லையில் கரடி ஊருக்குள் புகுந்தது ஒரு பெண்னை தாக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். இங்குள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அதனை வனத்திற்குள் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து விடுவதை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுபன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களிலும் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. 




அதிகாலையில் பெண்னை கடித்த கரடி!


இந்நிலையில் இன்று அதிகாலை அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியில் கரடி ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. பின்னர் அந்த கரடி பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல் தெரு மற்றும் வீரப்பர் தெரு முதலியபுரம் வழியாக சென்றுள்ளது. இதனை பார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் கரடியை விரட்டி அடித்துள்ளனர். அப்போது ஓரமாக நின்று கொண்டிருந்த லட்சுமி என்ற பெண்ணின் கையில் கரடி கடித்துள்ளது. மேலும் சாலையில் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர்  நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியை தேடி வருகின்றனர்.  மேலும் கரடி கடித்த லட்சுமியை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் வனத்துறையை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நெல்லையில் தொடரும் கரடி நடமாட்டம்


குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் இரவு 2 குட்டிகளுடன் கரடி ஒன்று விக்கிரமசிங்கபுரம் அருகில் உள்ள கோட்டை விளைப்பட்டி மற்றும் சங்கரபாண்டியபுரம் இணைப்பு சாலையில் உள்ள தீரன் சுடலைமாடசுவாமி கோயில் பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அதே போன்று கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அதேபகுதியில் பெண் ஒருவர் அதிகாலையில் கரடியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு சிவந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் இரவு நேரங்களில்  கரடி சுற்றி திரிந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பையும் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியது. அதேபோல கடந்தாண்டு ஆழ்வார்குறிச்சி அருகே இருவரை கரடி மிக கொடூரமாக கடித்து குதறியது. தொடர்ந்து அடுத்தடுத்து கரடி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதால் மலையடிவார மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.