வாக்கு எண்ணிக்கையும் வழிபாடும்:
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகளுக்கான கட்சியினர் ,பொதுமக்கள், தொண்டர்கள் என பலரும் ஆர்வமுடன் காத்து உள்ளனர். இதனிடையே முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என கட்சி தொண்டர்கள், வேட்பாளர்கள், தலைவர்கள் என கோயில்களில் தீவிர வழிபாடும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வெற்றி பெற வேண்டி சுவாமி தரிசனம் செய்தனர்.
சரத்குமார், ராதிகா சரத்குமார் பேட்டி:
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரத்குமார் கூறும் பொழுது, நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்காக விருதுநகர் வந்துள்ளோம். நேற்று சிவகங்கையில் உள்ள குலதெய்வ கோவிலில் வழிபாட்டை முடித்துவிட்டு இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்துள்ளோம். மீண்டும் பாரத பிரதமர் மோடி வருவதற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறுவதற்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறந்த முறையில் வெற்றி பெற வேண்டியும் இறைவனை வேண்டியுள்ளோம். நாளை வாக்கு எண்ணிக்கை பிறகு பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராதிகா சரத்குமார், சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளோம். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும். நாளை வாக்கு எண்ணிக்கை, மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார். தொடர்ந்து வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு நாளை பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
சரத்குமார் அங்கப்பிரதட்சணை:
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையானது தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் எனவும், மனைவி ராதிகாவின் வெற்றிக்காக நடிகர் சரத்குமார் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலிலில் அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. குடும்பத்துடன் சென்று கோயில்களில் வழிபாடு செய்து வருவதோடு நாளைய தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.