தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துவதாக எஸ்டிபிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் அவரது மகளை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை கொடூரத்தை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகளையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இது போன்ற பல சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 17 வயது சிறுமி 9 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மட்டுமின்றி, அந்நிகழ்வை வீடியோவாக எடுத்து மிரட்டி, தொடர்ச்சியாக 5 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்கு அந்த இளம்பெண் ஆளாகி வந்துள்ளார். இதேபோல், திண்டுக்கல் அருகே சகோதரிகள் இருவர் கத்தி முனையில் கடத்திச் செல்லப்பட்டு 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் சமீப காலமாக கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்த அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகி வருகின்றன.


பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாக இந்தியா உள்ளது என பல்வேறு தரப்பின் ஆய்வுகள், அறிக்கைகள் கூறும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மூலம் தமிழகமும் அத்தகையதொரு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை நோக்கிச் செல்கிறதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த குற்றம் தொடர்வதற்கு முக்கிய காரணம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் மீதான வழக்கு விசாரணை விரைவாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவதில்லை என்பதுதான். ஆகவே, குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் சிறுமிகளும் உள்ளனர். ஆகவே, குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


பெண்களின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கும் இது போன்ற மிக மோசமான சூழல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, ஒழுக்கம் மிகுந்த சூழலை உருவாக்க நாம் தவறினால், அது நமது சமூகத்தை மிகப்பெரிய ஆபத்தை நோக்கி இழுத்துச் சென்றுவிடும் என்பதை அரசும், பொது சமூகமும் உணர்ந்து பெண்களின் பாதுகாப்பை அனைத்து ரீதியிலும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.