கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செயல்படுத்தப்படும் சி.எஸ்.ஆர் எனப்படும் சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்ட நிதிகள் அனைத்தும் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு பற்றிய மக்களின் அச்சத்தை போக்குவதற்கான விரிவான அறிக்கை வெளியிடப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 20ஆம் தேதி முதல் கூடங்குளம் அணுமின் நிலையம் முன்போ அல்லது அலுவலர் குடியிருப்பு முன்போ உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக அவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுரேஷ் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர்களிடம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் வி. எஸ். ஆர் ஜெகதீஷ் தலைமையில் கோரிக்கை மனுவையும் அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஎஸ் ஆர் ஜெகதீஷ் கூறும்பொழுது,




நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகள் தற்போது செயல்பட்டு தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளின் கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய சி எஸ் ஆர் எனப்படும் சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் ராதாபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும், வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ராதாபுரம் ஒன்றியத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பணிகளில் முன்னுரிமை வழங்கி வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய சிஎஸ்ஆர் நிதியிலிருந்து நிரந்தரமாக நியமித்து இலவச புற்றுநோய் தனிப்பிரிவு மற்றும் இலவச டயாலிசிஸ் பிரிவு அமைத்திட வேண்டும்.


கூடங்குளம் அணுமின் நிலைய சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்ட நிதியின் மூலம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயினை முழுவதுமாக அகற்றி மறு சீரமைப்பு செய்து புதிதாக கட்டப்பட வேண்டும். அணு உலையிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படைத் தன்மையான விரிவான அறிக்கை மற்றும் பொதுமக்களிடம் விளக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளுக்கு வருகிற டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி உயர் நீதிமன்ற கிளையில் அனுமதி பெற்று கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தினை கண்டித்து கூடங்குளம் அணுமின் நிலைய வாயில் முன்பு அல்லது கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பு வாயில் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ராதாபுரம் ஒன்றியம் உள்ளாட்சி அமைப்பு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.