நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் பேரூராட்சி நிர்வாகத்தில் பெண் தலைவரின் கணவர் தலையீடு அதிக அளவில் இருப்பதாகவும் கூறி ஆளும் கட்சி சேர்ந்த உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணி கட்டி வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுங்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களான 15 வது வார்டு தங்கராஜ், 10 வது வார்டு அன்வர் உசேன், 11 வது வார்டு பரக்கத்பேகம், 14 வது வார்டு செய்பு நிஷாபேகம், 18 வது வார்டு தேவி, 17 வது வார்டு மல்லிகா ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து வாயில் கருப்பு துணி கட்டியபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து பரக்கத்பேகம் கூறும் பொழுது, ஒவ்வொரு கூட்டத்திலும் நிறைய கோரிக்கைகள் வைத்துள்ளோம், அதற்கு தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்படுகிறதே தவிர கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றி தரவில்லை,  தற்போது மழைக்காலம் என்பதால் பள்ளமான பகுதிகளை பார்வையிடுங்கள், நோய் தொற்றும் அதிகமாக உள்ளது என கூறி வருகிறோம். அதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாகத்தில் பெண் தலைவர் இருக்கிறாரே தவிர அவரின் கணவரின் தலையீடு தான் இங்கு அதிகமாக உள்ளது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளை தான் கேட்கிறோம், அதை செய்து தர மறுப்பதோடு கவுன்சிலர்களை ராஜினாமா செய்ய வைத்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். வார்டு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதோடு நிர்வாகத்திற்கு வந்து பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து முறையிட்டால் கவுன்சிலர்களை இங்கு மதிப்பதில்லை. எங்களது கோரிக்கையை சொன்னால் மனு எழுதி கொடுக்க சொல்லுகின்றனர். எங்களுக்கே இந்த  நிலை என்றால் பொதுமக்களின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும் என்றனர். 




அதோடு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை சரி செய்வதற்கு பொதுமக்களிடமே பணம் வசூலித்து சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாகம் செய்யும் அளவிற்கு உள்ளது. பேரூராட்சியின் வைப்பு நிதியை பயன்படுத்தாமல் அரசு பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.. சேரன்மகாதேவி பேரூராட்சி தலைவியின் கணவர் தலையீடு மற்றும் அவரின் அட்டூழியம் அதிகமாக இருப்பதால் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அதோடு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் எங்களது கோரிக்கைகளையும் புகாரையும் தெரிவித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை,  விரைவில் நடவடிக்கை இல்லையென்றால் வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார். பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் மறுக்கப்படுவதோடு பெண் தலைவர் கணவரின் தலையீடு அதிகமாக இருப்பதாக கூறி ஆளுங்கட்சி உறுப்பினர்களே கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்து போராட்டத்தில்  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.